இதுவே கடைசி வாய்ப்பு! பயன்படுத்துமா தமிழர் தரப்பு?

navaneetham-pillai1ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்த காலம் தொடக்கம், தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான கோரிக்கைக்கு இப்போது உலகம் செவிசாய்த்துள்ளது.

போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து ஐநாவின் மேற்பார்வையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தன.

இதனை முன்வைத்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இப்போது அந்தக் கோரிக்கை செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு அடுக்கு விசாரணைக்குழு, அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கப் போகிறது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம், ஜெனிவாவில் இந்த விசாரணையைக் கோரும் தீர்மான வரைவை அமெரிக்கா சமர்ப்பித்த போது, அதில் சர்வதேச விசாரணை என்ற பதம் இருந்திருக்கவில்லை.

அதனை வைத்துக் கொண்டு இது சர்வதேச விசாரணை அல்ல என்றும், தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்றும் ஒரு தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர்.

எனினும், ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால், முன்னெடுக்கப்படும் இந்த விரிவான விசாரணை, சர்வதேச விசாரணையாக மட்டும் அமையாமல், இதனைக் கண்காணிக்க இரண்டு சுதந்திரமான நிபுணர்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

இதன் மூலம் இந்த விசாரணைக்கான உயர் பெறுமான வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

சுதந்திர நிபுணர் குழு விசாரணை என்றால் அதில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே அங்கம் வகிப்பர்.

அதனால் அந்தக் குழுவை இலகுவாகவே புலிகளுக்கு ஆதரவான விசாரணைக் குழு என்று இலங்கை அரசாங்கத்தினால் முத்திரை குத்த முடியும்.

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் 2010ம் ஆண்டு நியமித்த நிபுணர் குழுவை அவ்வாறு தான் அரசாங்கம் புலிகளின் அனுதாபிகள் என்று கூறியது.

ஆனால் 12 பேரைக் கொண்டதான ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகள் குழுவை அவ்வளவு இலகுவாக புலிகளின் அனுதாபிகள் என்று எழுந்தமானத்தில் குற்றஞ்சாட்ட முடியாது.

அவ்வாறு குற்றஞ்சாட்டினாலும் இந்த விசாரணைக் குழுவை இரண்டு வெளியக நிபுணர்களும் கண்காணிக்கப் போகின்றனர்.

எனவே இந்த விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பானது என்றோ வெளிப்படைத்தன்மையற்றது என்றோ ஒருபோதும் குற்றஞ்சாட்ட முடியாது.

ஐநா விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுவதற்குக் காரணம், அதன் மீது கொண்டுள்ள அச்சமேயாகும்.

ஐநா விசாரணைக் குழுவைப் பற்றி அரசாங்கம் இதுவரை புலிகளுக்கு சார்பான குழு என்ற கருத்தை வெளியிடவில்லை.

இதனை இந்த விசாரணைக் குழுவின் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் உயர் கவனத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாம்.

அதேவேளை, இந்த விசாரணைக்குழு இலங்கைக்கு வர அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

நாடாளுமன்றத்திலும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தமிழர் தரப்பு தமது பக்கத்தில் உள்ள முறைப்பாடுகளையும் நியாயங்களையும் எவ்வாறு இந்த விசாரணைக்குழுவின் முன்பாகக் கொண்டு செல்லப் போகின்றது என்பது முக்கியமான கேள்வியாகும்.

அரசாங்கம் விசாரணைக்குழுவை நாட்டிற்குள் அனுமதிக்காமைக்கு பிரதான காரணம், பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்களை விசாரணைக்குழு பெற்றுவிடக்கூடாது என்பதேயாகும்.

அதற்காக தமது பக்கத்தில் உள்ள நியாயங்களைக் கூறும் வாய்ப்புக்களையும் இழப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.

தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு சகுனப் பிழையாகி விட வேண்டும் என்பது போலுள்ளது அரசாங்கத்தின் நிலைப்பாடு,

பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தான் இந்த விசாரணைகளின் முக்கியமான பகுதியாக இருக்கும்.

ஆனால் அதற்கான வாய்ப்புக்களுக்கு அரசாங்கம் தடை போட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுமுன் சாட்சியமளிக்கத்தக்க, மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் தான் இலங்கைக்கு வெளியே வசிக்கின்றனர்.

எனவே, இந்த விசாரணைகள் முழுமை பெற வேண்டுமானால், பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்துக்களும், ஐநா விசாரணைக்குழுவைச் சென்றடைந்தாக வேண்டும்.

இத்தகைய நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றே தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத் தரும் என்று வாதிட்டும் வந்த, தமிழர் தரப்பு, ஒட்டுமொத்த சாட்சியங்களையும் ஐநா விசாரணைக் குழு முன் நிறுத்துவதற்கு என்ன செய்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஐநா விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் என்பது மிகவும் குறுகியது.

வெறும் பத்து மாதங்களுக்குள், ஏழு ஆண்டு கால மீறல்கள் குறித்து அது விசாரிக்கப் போகிறது.

இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அத்தனை மீறல்களையும் ஒன்று திரட்டி விசாரணைக்குழுவின் முன்பாக கொண்டு செல்வது முக்கியமானதொரு விடயம்.

ஐநா விசாரணைக்குழு நேரடியாக விசாரணையை மேற்கொள்ளும் சூழல் ஒன்று காணப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே சாட்சியங்களை அளிக்க முன்வருவர்.

ஆனால் ஐநா விசாரணைக்குழு நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத நிலையில் சாட்சிகளை ஒருங்கிணைத்து ஐநா விசாரணையாளர்களின் முன்பாக நிறுத்துவது கடினமான காரியமாகும்.

சாட்சிகளை ஒருங்கிணைக்கத் தொடங்கும் போதே அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதற்காக ஐநா விசாரணையை தவிர்த்து எட்ட நின்றால், இந்த விசாரணையின் நோக்கம் சிதைந்து போகும்.

தமிழர்கள் எதிர்பார்த்த, கோரி நின்ற நீதியும் கிடைக்காமல் போய்விடும்.

எனவே முடிந்தளவுக்கு தமிழர் தரப்பின் நியாயங்களையும் சாட்சியங்களையும் ஐநா விசாரணைக்குழு முன்வைப்பதற்கு முயற்சிகளை எடுத்தாக வேண்டிய கடப்பாடு தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.

மீறல்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தல், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தல், மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றைக் கண்ணால் கண்ட சாட்சிகளை முன்னிலைப்படுத்தல் இவ்வாறு பல கட்டங்களாக ஐநா விசாரணைக்கு உதவ வேண்டிய பொறுப்பு தமிழர் பிரதிநிதிகளுக்கு உள்ளது.

இது ஒன்றும் இலகுவானது அல்ல.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தான் இதைச் செய்ய வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறதா? அதற்காக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

ஐநா விசாரணைக்கு தாம் உதவத் தயார் என்று கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, ஐநா விசாரணைகளுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார்.

என்றாலும், அது எந்தளவுக்கு செயல்வடிவம் பெற்றுள்ளது என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

அதேவேளை, இதனை அவர்களால் வெளிப்படுத்தவோ, வெளிப்படையாக மேற்கொள்ளவோ முடியாத நிலை உள்ளது என்பதையும் ஏற்றாக வேண்டும்.

எவ்வாறாயினும், ஐநா விசாரணைப் பொறிமுறையின் மூலம் நியாயம் தேடிக் கொள்ளும் வாய்ப்பை தமிழர் தரப்பு ஒருபோதும் தவறவிட்டு விடக்கூடாது.

இதுபோன்ற இன்னொரு வாயப்பு கிடைக்கும் என்று அல்லது இத்தகைய விசாரணை இனிமேல் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை, இந்த விசாரணையின் அறிக்கை அடுத்த கட்ட விசாரணைகள் நீதி தேடும் நடவடிக்கைக்கு அடித்தளமாக அமையலாம்.

எனவே, இந்த வாய்ப்பை தமிழர் தரப்பு நழுவ விடுமானால், தொடர்ச்சியாக நியாயம் தேடும் தமிழர்களின் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விடும்.

போரின் போது நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரியது உண்மையானால், சர்வதேச விசாரணைகள் தேவை என்று போராட்டங்களை நடத்தியது உண்மையானால், இந்த வாய்ப்பை தமிழர் தரப்பிலுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரச தரப்பு விசாரணையை புறக்கணித்துள்ள நிலையில் தமிழர் தரப்பின் நியாயம் கூடுதலாகச் செவிமடுக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, குறுகிய காலத்திற்குள் இந்த விசாரணையை எதிர்கொள்வதற்கான, விசாரணைக்கு உதவுவதற்கான ஒரு செயல் பொறிமுறையை தமிழர் தரப்பு உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இது தவறவிடப்படுமானால், தவறு இழைக்கப்படுமானால், சர்வதேச விசாரணையைக் கோரியது அர்த்தமற்றுப் போய்விடும்.

அதுமட்டுமன்றி ஒரு வரலாற்றுப் பழியும் தமிழர் பிரதிநிதிகளுக்கு வந்து சேரும்.

– கபில்

TAGS: