அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளிர் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விபரமான அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு அரசாங்கம் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் நாடுகள் எச்சரித்திருந்தன.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர், மேற்படி சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வழங்கியுள்ளார்.
வளைகுடா நாடு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு மட்டுமல்லாது, இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் ஏற்பட்ட சம்பவஙகள் குறித்து விளக்கியதாக அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
அளுத்கம ,பேருவளை மற்றும் தர்கா நகர் சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, குவைத், மாலைதீவு, பாகிஸ்தான், ஈரான், ஈராக், பாலஸ்தீனம், சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், துருக்கி ஆகிய நாடுகளின் கொழும்பில் உள்ள தூதரகங்கள், அரசாங்கத்திற்கு வலுவாக வலியுறுத்தியிருந்தன.
இலங்கை தொடர்பான வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை செய்யப் போவதாகவும் சில நாடுகள் எச்சரித்திருந்தன.
இதனால், தமது நாடுகளில் பணியாற்றும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடும் எனவும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியிருந்தன.