ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழர்களுக்குரிய பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருடன் நடத்திய சந்திப்பின் போது, ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
அதுகுறித்துக் கூறும் போதே ஐ.நா உதவிச் செயலர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
இந்த விசாரணையின் போது, இலங்கை அரசாலும், அதன் இராணுவத்தினராலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளனர்.
ஆயினும் இலங்கை அரசு, ஐ.நா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளதுடன், சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, சாட்சியமளிப்பவர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இவற்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.
நேற்றைய சந்திப்பிலும் இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலளித்த ஐ.நா உதவிச் செயலர், சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.