ஐ நா விசாரணைக் குழுவில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி?

mardri_pilandஐ.நா விசாரணைக் குழுவில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு, குழுவின் ஆலோசனை வழங்கும் பிரத்தியேக நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பான விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவை வழிநடத்தவும் ஆலோசனைகளை வழங்கவும் வெளியக வல்லுநர்கள் இருவரை நியமிக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவு செய்திருந்தமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இரண்டு நிபுணர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. இவர்களில் ஒருவராக நியுசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் டேம் சில்வியா கட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது வல்லுநராக ஆசியா அல்லது ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முயன்றதாகவும் எவரும் கிடைக்காத காரணத்தால் பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் சாமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவருமான மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாமென ஊகிக்கப்படுகின்றது.

இவர் ஐக்கிய நாடுகளின் கொசோவாவிற்கான பிரதிநிதியாகவும் பணியாற்றியவராவார்.

இதேவேளை, விசாரணைக் குழுவினரின் உறுப்பினர் தெரிவு மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் இந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கபடுகின்றது.

இதேசமயம், விசாரணை சபை முன் சாட்சியமளிக்க முன்வரும் தமிழ் மக்களிற்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுமென ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி செயலாளர் ஒஸ்கர் பேர்னான்டஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

TAGS: