இலங்கையில் கடந்த பல தினங்களாக நாடு முழுவதும் முஸ்லிம் பொதுமக்கள் வீதிகளை மறித்து நடத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு எதிராக நாட்டின் சட்டத்தை ஏன் செயற்படுத்தவில்லை என ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரின் கையெழுத்துடன் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த மக்கள் அமைதியான கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தும் போது தடை செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இந்த சட்டம் ஏன் முஸ்லிம்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை? அவர்களுக்கு நாட்டில் தனியான சட்டம் அமுலில் இருந்து வருகிறதா?
அளுத்கம சம்பவத்தின் பின்னர், பௌத்த மக்களும், பௌத்த அமைப்புகளும் மாவனல்லை, ருவான்வெல்லை, பதுளை, மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் நடத்தவிருந்த பௌத்த கூட்டங்கள் தடை செய்யப்பட்டன.
நாட்டில் அமைதி, மத சகவாழ்வு என்பவற்றை தற்காத்து கொள்ளும் தேவையின் நிமித்தம் இந்த கூட்டங்கள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அமைதியான நிலைமையை தற்காத்து கொள்வதற்காக முஸ்லிம், அமைப்புகள், அடிப்படைவாத குழுக்களுக்கு எதிராக ஏன் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை. நாட்டின் சட்டத்திற்கு மேல் ஷரியா சட்டம் அமுலில் இருப்பது இதற்கு காரணமா?
எவரை மகிழ்விப்பதற்காக பௌத்தர்களை அச்சுறுத்தி, அவர்களை ஆக்கிரமித்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது?
முஸ்லிம்கள் ஹர்த்தாலில் ஈடுபடும் போது பௌத்தர்களை தேடி வேட்டைக்கு போகும் பொலிஸார் நாட்டுக்கு கிடைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பொய்களை பரப்பி வரும் நிலையில், சிங்கள பௌத்தர்களின் குரல்களுக்கு இலத்திரனியல், அச்சூடகங்களில் உத்தியோகபூர்வமற்ற தடை விதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
நாட்டின் பெரும்பான்மை பௌத்த மக்களுக்கு இவ்வாறான துயரமான நிலைமை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் எதிர்நோக்க நேர்ந்துள்ளமை பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சோபித தேரர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.