ஜிஹாத், தாலிபான்கள் அமைப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை

mujeeb_jehathஇலங்கையில் ஜிஹாத் மற்றும் தாலிபான் அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று கொழும்பில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் ஜிஹாத், தாலிபான் அமைப்புகள் குறித்தும் அந்த அமைப்புக்களுடன் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் கடுமையான தொணியில்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அளுத்கம இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் முஸ்லிம் வர்த்தகர்கள் ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பிரபல வர்த்தக நிலையமான நோலிமிட் நிறுவனம் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவில்லை.

அதனைக் கண்டித்த ஐவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனைச் சாட்டாக வைத்து புலனாய்வுப் பிரிவினர் முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவப் பேச்சாளர் ஆகியோர் இலங்கையில் ஜிஹாத், தாலிபான் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பும் இல்லை என்று உறுதியாக தெரிவித்திருந்த விடயம் குறித்து முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில், பாதுகாப்பு அமைச்சுக்கே தெரியாத தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை பகிரங்கப்படுத்தவோ, பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கவோ முன்வருமாறு புலனாய்வுப் பிரிவினரை அவர் மடக்கியுள்ளார்.

அவரின் வாதத்துக்கு முன் செயலற்றுப் போன புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை இடையில் நிறுத்திவிட்டு, முஜிபுர் ரஹ்மானை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் நோலிமிட் தாக்குதல் சம்பவத்துடன் முஜிபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுமாறு அரச தரப்பு ஊடகங்களிடம் ரகசிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

TAGS: