கனடாவில் வாழ்ந்துவரும் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மற்றும் நாடுகடத்த முயன்று வருவதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கனேடிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
இலங்கை அப்படியான கோரிக்கையை விடுத்திருப்பது தொடர்பில் கனேடிய நீதியமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.
கனடாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் குற்றவாளி ஒருவரை இன்டர்போல் ஊடாக கைது செய்ய முயற்சித்து வருவதாக இலங்கை பொலிஸார் இந்த வாரம் தெரிவித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்படும் கனகராஜா ரவிசங்கர் என்பவரை கைது செய்ய வவுனியா மேல் நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்திருந்தது.
சந்தேக நபரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கனடாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து கருத்து எதனையும் வெளியிட முடியாது என கனேடிய நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
கனடாவில் இருந்து ஒப்படைக்கப்படுவது குறித்த கோரிக்கை தொடர்பிலான தொடர்புகள் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இரகசியமாகும்.
இந்த விடயமோ அல்லது வேறு எந்த விடயமாக இருந்தாலோ அது பற்றி உறுதிப்படுத்தும் அல்லது மறுக்கும் நிலையில் தாம் இல்லை என கனேடிய நீதியமைச்சின் செய்தி தொடர்பாளர் கரோல் செய்ன்டன் தெரிவித்துள்ளார்.
ரவிசங்கர் ஒரு காலத்தில் கப்பல் கப்டனாக இருந்ததுடன் போர் நடைபெற்ற காலத்தில் கடல் வழியாக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்க கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.