முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவது பொறுக்காமல் அடித்து விரட்டுகின்றனர்: விக்னேஸ்வரன்

wikki_price_001முஸ்லிம்கள் பொருளாதார நிலையில் முன்னேறுவதை பொறுக்க முடியாத பெரும்பான்மையினர் அவர்களை அடித்து அடித்து துரத்துகின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் தமிழர்கள் இலங்கையின் தெற்கில் இருந்து விரட்டப்பட்டார்கள். இன்று முஸ்லிம்கள் விரட்டப்படுகின்றார்கள்.

சிறுபான்மையினரால் தமக்கு அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன, போட்டிகள் உருவாகின்றன அல்லது நிகழக் கூடும் என்று பெரும்பான்மையினர் நினைத்தால் உடனே சிறுபான்மையினரைத் துன்புறுத்தத் தொடங்கி விடுவார்கள்.

முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்த அரசாங்க உத்தியோகங்களில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி இருந்தார்கள். இதனால் தான் தமிழர்களை விரட்ட 1958ம் ஆண்டு தொடக்கம் கலவரங்கள் தெற்கில் வெடித்தன, 1983ல் முற்றாக வெடித்தது.

இன்று முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதைக் கண்டதும் பெரும்பான்மையினருக்கு அதைப் பொறுக்க முடியாமல் இருக்கின்றது. அடித்துத் துரத்தப் பார்க்கின்றனர். தொழிலிடங்களைத் தீக்கிரையாக்குகின்ரனர்.

இதை ஏன் கூறுகின்றேன் என்றால் நாம் ஒன்றை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். மேலைத் தேசங்களில் உயர் கல்வி நாடுவோர் தொகை அங்குள்ள உள்ளூர் வாசிகளினுள் மிகமிகக் குறைவு.

அவர்களின் எல்லா உயர்கல்வி தொழில்களையும் இந்தியரும், இலங்கையரும், வேறு நாட்டினரும் தம் கைவசமாக்கியுள்ள இந்தத் தருணத்தில், பொருளாதார சரிவை மேலைத் தேசங்கள் எதிர்நோக்க வேண்டி வந்தால் என்ன நடக்கும்? உள்ளூர் மக்களின் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

அதனால் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய எம்மவர்கள் மீது கோபம் ஏற்படக் கூடும். இன்று இந் நாட்டின் தெற்கில் எவ்வாறு அப்பேற்பட்ட கோபம் பிரதிபலிக்கப்படுகிறதோ அதே போல் மேலைத் தேசங்களிலும் அவர்களின் கோபம் மேலெழுந்து வந்தால் என்ன நடக்கும்? எம்மவரைத் தமது சொந்த நாடுகளைத் தேடிச் செல்ல அப்பேர்ப்பட்ட ஒரு நிகழ்வு வழிவகுக்கும்.

எனவே எங்கள் மாணவ மாணவியர் உயர் கல்வியின் பின்னர் மேலைத் தேசங்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். என்று கூறுகின்றேன்.

எமது நாட்டில் இருந்தே மக்களுக்குத் துணையாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கூற ஆசைப்படுகின்றேன். அதுவும் வட, கிழக்கு மாகாணங்களில் இத் தேவையானது முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முக்கியமாகி வருகின்றது என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

TAGS: