ஐ.நா குழுவுக்கு நேரடியான பங்களிப்பு சாத்தியமில்லை : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

HR-Srilanka_CIஇலங்கை மீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ள வல்லுநர் குழுவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அண்மையில் அறிவித்திருந்தது.

 

இந்த விசாரணைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பங்களிப்பு வழங்குமா என்று மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவாவிடம் சர்வதேச ஊடகமொன்று கேட்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

 

‘எங்களால் நேரடி பங்களிப்பைச் செய்யக்கூடிய நிலைமை இல்லை. நாங்கள் தேசிய மட்டத்தில் தான் பணியாற்ற முடியும். எனவே எங்களின் நேரடி பங்களிப்பு இந்த விடயத்தில் இருக்கும் என்று தெரியவில்லை’ என தெரிவித்தார்.

 

’20 பேர் ஐ.நா குழுவுக்கு சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஐ.நா சபையால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் இலங்கைக்கு வெளியில் இருந்துகொண்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் இலங்கையிலுள்ள மக்களிடம் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என கேட்கப்பட்டிருந்தது.

 

’20 பேர் அல்லது 20 அமைப்புகள் சாட்சியமளிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததை நாங்கள் அவதானித்துள்ளோம். தேசிய மட்டத்தில் இவர்களிடமிருந்து தகவல்களை பெறுவது எந்தளவுக்கு சாத்தியப்படும். முறையான விசாரணை ஒன்று நடக்குமானால், இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகத் தான் பணியாற்ற முடியும்’ என்றார்.

 

ஐ.நா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளது. அந்த விசாரணைகளுக்கு தகவல் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, தென்னிலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

 

இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்குமான பரிந்துரைகளை இந்த விசாரணைகளின் முடிவில் தாம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா இதன்போது தெரிவித்தார்.

TAGS: