இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயும் குழு தொண்டு அடிப்படையிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் இந்த விசாரணைக் குழுவை நியமித்திருந்தது.
அந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறான செயற்பாடுகளில் அனுபவம் மிக்க, வல்லுநர்கள் மூவர் அடங்கிய குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
அந்தக் குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும்.
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் ஜனாதிபதியுமான மார்ட்டி அத்திசாரி, நியூஸிலாந்தின் முன்னாள் ஆளுநர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
இந்த மூன்று வல்லுநர்களும் இந்தப் பணிகளைத் தொண்டு அடிப்படையிலேயே மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பணிகளுக்காக எதுவித வேதனமும் அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
இவர்கள் விசாரணைக் குழுவின் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்குபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.