கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாதம்’

AAAஇலங்கையில் வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்கள் பிரதேசவாதத்தால் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்று மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அரச அலுவலர்கள் பிரதேசவாதத்துடன் நடந்துகொள்வதாக குறை கூறப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக மக்கள் வாழும் கிராமப்பகுதிகளுக்கு ஞாயிறன்று விஜயம் செய்து அவர்களின் வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

வீட்டு வசதிகள், வாழ்வாதாரம், வீதி உட்கட்டமைப்பு வசதிகள், கல்வித் தேவைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் முதலமைச்சரிடமும் அவருடன் சென்றிருந்த வடக்கு மாகாணசபை அமைச்சர்களிடமும் எடுத்துக் கூறியுள்ளனர்.

‘மலையகத்தில் வன்முறைகளில் பாதிக்கப்பட்டு, இங்குவந்து குடியேறிய மக்கள் இந்தப் பிரதேசத்தை வளமுள்ளதாக ஆக்கியிருக்கின்றீர்கள். இப்போது வடமாகாண சபை செயற்படத் தொடங்கியிருக்கின்றது. அதனை ஆட்டம் காணச் செய்வதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உங்களுடைய பிரச்சனைகள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றன’ என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

‘பாகுபாடு காட்டுவது நியாயமில்லை’

‘எமது அலுவலர்களில் சிலர் பிரதேச வாதத்தை எழுப்பி, நீங்கள் மலையகத் தமிழர், நாங்கள் உள்ளுர் தமிழர். உங்களுக்கு உரித்துக்கள் தரமாட்டோம் எனக் கூறி பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக நான் அறிகின்றேன். அந்த அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். எனது மலையகத் தமிழர்களை நீங்கள் எவ்வாறு அந்நியர்களாகக் கருதுகின்றீர்களோ, அதேபோல்தான் உங்களை அந்நியர்கள் என்று சிங்கள பிக்குமார்கள் கூட்டம் கூடி கூறுகின்றார்கள்’ என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர்.

‘இன்று வடக்கு கிழக்கு மக்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். ஏஞ்சியிருக்கின்றவர்கள் நாங்கள் எமது உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். எங்களோடு வாழ்ந்து, எமக்குத் தோளோடு தோள்கொடுத்து செயற்பட்டு வருகின்ற மலையக மக்களுக்கு அதிகாரப் பாகுபாடு காட்டுவது என்ன நியாயம்’ என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், கல்வித்துறை அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களும் முதலமைச்சருடன் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டிருந்தனர். -BBC

TAGS: