மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தும் அரசாங்க பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய
மோடியுடன் ஐநா விசாரணைக்குழுவை தடுப்பதில் அரசாங்கத்திற்கு துணையாக செயற்படுவோம் எனவும் தெரிவித்தது.
மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பிலும் ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு அனுமதி இல்லை என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பிலும் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கு எதிராக சர்வதேச சக்திகள் செயற்பட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தி நாட்டை அழிக்கும் முயற்சிகளையே தொடர்ச்சியாக செய்து வருகின்றது.
கடந்த காலங்களிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டு காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச நாடுகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
இப்போதும் நாட்டிற்கு எதிரான பல சதித் திட்டங்களை கூட்டமைப்பு செய்து கொண்டே இருக்கின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.
எனினும் கூட்டமைப்பினர் அவ்வாறான முயற்சிகளை எடுப்பது இந்தியாவை தம்வசப்படுத்தி இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்தும் முயற்சியிலேயே. இது அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய விடயமே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை அனைவரும் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். எனவே இதில் ஆச்சரியப்படும் அளவில் ஒன்றும் இல்லை.
மேலும், ஐ.நா. விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் விசாரணைக் குழுவிற்கு விசா வழங்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமே.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்றினை தடுக்க விசாரணைக் குழுவின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு துணையாகவே செயற்படுவோம்.
அதேபோல் நாட்டிற்குள் செயற்படும் தேசத்துரோகிகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.