தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாலும், இலங்கை மீது இந்தியா எவ்வாறான அழுத்தங்களையும் பிரயோகிக்காது. இலங்கையானது இறைமையுள்ள ஒருமைப்பாட்டைக் கொண்ட நாடு என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சி என்ற வகையில் உலகில் எந்தவொரு தலைவரையும் சந்தித்துப் பேச்சு நடத்தலாம். அதற்காக இந்தியா எமது உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்மாதம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகின்றனர் என்பதற்காக இந்தியா இலங்கை மீது எவ்வாறான அழுத்தத்தையும் பிரயோகிக்காது. எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் இறைமை பாதிக்கும்படி செயற்படக்கூடாது.
அந்த வகையில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்பதுடன் அழுத்தங்களையும் பிரயோகிக்காது. இல்ஙகை இறைமையும் ஒருமைப்பாட்டையும் கொண்ட நாடு என்பது சிரேஷ்ட தலைவராக இருக்கும் நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரியும். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தலையிடாது.
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதனை நம்பிக்கொண்டு இந்திய பிரதமர் எவ்வாறான அழுத்தத்தையும் எமக்கு பிரயோகிக்கமாட்டார். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை.