தமிழ்நாட்டில் காணாமல் போன இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா சென்றார்களா?

srilanka_refugee_australiaஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 100 பேர், காணாமால் போயிருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் அமைப்பு கூறுகிறது.

தமிழக முகாம்களில் இருந்து 57 பேரும், முகாமுக்கு வெளியே கீழ்ப்புத்துபட்டு என்ற ஒரு கிராமத்தில் வசித்த 40 பேரும் ஜூன் மத்தியிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும், இவர்களும், இந்தப் படகில் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் இருப்பதாகவும், தமது அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சந்திரகாசன் பிபிசி தமிழோசையிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இது தவிர, இந்தப் படகில் மீதமுள்ளவர்கள் இலங்கையிலிருந்து நேரே வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்திரகாசன் தெரிவித்தார்.

இது ஒரு கணிப்பே தவிர, இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்க மேலும் பொறுத்திருக்கவேண்டும் என்றார் அவர்.

ஜூன் மாதம் 18ம் தேதி வாக்கில் இந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு செய்மதித் தொலைபேசி ( சேட்டலைட் போன்) மூலம் அழைப்பு வந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததை வைத்துப் பார்க்கும்போது, இந்த அழைப்பு கடலில் இருந்து வந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுவதாக சந்திரகாசன் கூறினார்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக வாழ்ந்து வரும் நிலையில், இது போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் படகுப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தமது அமைப்பு அவர்களுக்கு வலியுறுத்திவருவதாகவும் அவர் கூறினார்.

ஐநா மன்ற அகதிகள் நிறுவன அறிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரப் படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தனக்கு அதிகார பூர்வமாக தகவல் இல்லை என்று ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

ஆயினும், தஞ்சம் கோரிகளை ஏற்றி வரும் படகு ஒன்று நடுக்கடலில் இடைமறிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அடிப்படை அகதிகள் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், அவர்கள் தங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு தேவை என்று கோரினால், அந்தக் கோரிக்கைகள் ,அவர்களை நடுக்கடலில் இடைமறிக்கும் நாட்டின் நிலப்பரப்பில் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதுதான் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின் நிலைப்பாடு என்று அந்த அறிக்கை ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பு குறித்த தேவைகளைப் பற்றி அவர்களிடம் முறையாகவும், தனித்தனியாகவும் கேட்கவேண்டும் , அத்துடன் அவர்கள் தங்களது பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி விளக்கக் கூடிய அளவில் அமைந்த ஒரு வழிமுறையிலும் அவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று அது கூறியது.

இது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுப்ப்ப்பட்டால், அவைகளை முறையாக பரிசீலித்து , அவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஆபத்தையோ, அல்லது பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் ஆபத்தையோ எதிர்கொள்கிறார்களா என்பதை நியாயமான வழிகளில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அது கூறியது.

இந்த மாதிரி நட்த்தப்படும் வழிமுறையைத் தவிர, எந்த ஒரு குறைந்த வழிமுறையும், ஏற்கனவே பலவீனமான தனிநபர்களை பெரும் ஆபத்துக்குள் சிக்கவைக்கும் அபாயம் இருப்பதாக அது கூறியது.

எந்த ஒரு தனி நபரையும், அவர் துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு நாட்டுக்கு, அவர் விருப்பத்துக்கு மாறாக திரும்ப அனுப்பக்கூடாது என்பதுதான் சர்வதேச சட்டம் என்படையும் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஆஸ்திரேலிய அரசுக்கும், வேறு நாடுகளின் அரசுகளுக்கும், இது போன்ற நடுக்கடலில் இடமறிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை தேவைப்பட்டால், ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் அதைத் தரத் தயாராக இருப்பதாகவும் அது கூறுகிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அரசு நடுக்கடலில் உயிர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா அகதிகள் நிறுவனம் பாராட்டியிருக்கிறது.

மேலும், தஞ்சம் கோரிகள், அகதிகள் மற்றும் நாடற்றவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான படகுப் பயணங்களுக்கு பலனளிக்கக்கூடிய மாற்றுவழிகளை உருவாக்குவது பற்றி மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அகதிகள் நிறுவனம் கூறியிருக்கிறது. -BBC

TAGS: