பாகிஸ்தான்- இலங்கை உறவு: தீவிர யோசனையில் இந்தியா

sl_pakistan_001இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் வெளிநாட்டு சக்திகள் தமது பயங்கரவாத தாக்குதல்களை தென்னிந்தியாவின் மீதும் மேற்கொள்ளக்கூடும் என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இந்த விடயம் குறித்து இந்தியா, இலங்கையுடன் பேச்சு நடத்தவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் அண்மைக்கால வன்முறைகளுக்கு வெளிநாட்டு பின்னணி இருப்பதாக அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனை கோடிட்டுள்ள இந்திய தரப்பு, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குறித்த வன்முறைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இதனை அந்த அமைப்பின் தலைவர் சயீட் இந்தியாவிலும் செயற்படுத்த முயற்சிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

எனவே இலங்கை, பாகிஸ்தானுடனான உறவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய தரப்பு இலங்கையிடம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டை சேதப்படுத்தும் என்றும் இந்திய தரப்பு சுட்டிக்காட்டவுள்ளது.

இந்த சந்தேகத்தை இந்தியா, வெறுமனே கற்பனையில் வெளியிடவில்லை. அண்மையில் தென்னிந்தியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் சாகீர் ஹுசைனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பின்னரே இந்த சந்தேகத்தை வெளியிடுவதாக இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.

TAGS: