விடைகாண முடியாத வினாவாகியுள்ள காணாமல் போயுள்ளோர் விவகாரம்

missing1_CI-70x52விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு உள்ளுர் பொறிமுறையை இலங்கை அரசு வலிந்து மேற்கொண்டிருந்தது.

சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க முடியாது என்று மறுத்துரைத்து, அதற்குப் பதிலாக உள்ளுர் பொறிமுறையின் மூலம் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் தெரிவித்திருந்தது. சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்ததனால் இலங்கை அரசாங்கத்தின் உள்ளுர் பொறிமுறை யோசனைக்கு சர்வதேசமும் இணக்கம் தெரிவித்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தக் குழுவின் மீதும், அதன் விசாரணைகளிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்த ஐநா மன்றம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் போதிய நம்பிக்கையில்லாத ஒரு நிலைமையிலேயே அதன் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

நம்பிக்கை இல்லாத போதிலும், இடம்பெற்றிருந்த சம்பவங்களைப் பதிவு செய்ய வேண்டும், தமது மனச்சுமைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டும், நடந்ததைக் கூறுவோம் நிவாரணமேதும் கிடைக்குமா என்று பார்ப்போம், வுpசாரணைகளை நடத்தி அரசு என்ன செய்கின்றது என்று பார்ப்போம் என்பது போன்ற பல்வேறுபட்ட மன உணர்வுகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியங்களைப் பதிவ செய்திருந்தார்கள்.

பலர் இந்த விசாரணை மீதும், இந்தக் குழுவின் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் குழுவினரிடம் முகத்தில் அடித்தாற்போல கூறியிருந்தனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகிய தனது சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தினாலே போதும், சர்வதேச விசாரணை என்ற ஒன்று அவசியமில்லை என்பது அந்தக் குழுவின் முதலாவது பரிந்துரையாகும்.

காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகக் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய தேசிய மொழிகளை உள்ளடக்கி மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய அளவில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விமர்சித்திருந்த அந்தக் குழு, சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. கில்லிங் பீல்ட்ஸ் என்ற சனல் 4 இன் காணொளி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் அது சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தக் குழுவின் சிபாரிசுகளை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நியமித்திருந்தது. முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவின் தலைமையில் குடிசன புள்ளிவிபரத் திணைக்களப் பணிப்பாளர் பிரியந்தி சுரஞ்சன வித்தியாரத்ன, முன்னாள் நாணய சபை உறுப்பினர் மனேகாரி இராமநாதன் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் யுத்தம் முடிவுக்கு வந்த ஆண்டாகிய 2009 ஆம் ஆண்டு வரையிலான பத்து வருடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பின்னர், விசாரணை ஆணைக்குழு சட்டவிதிகளுக்கு அமைவாக இந்த காலக்கெடு பின்னோக்கி நீடிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆட்கள் காணாமல் போனது தொடர்பில் வசிhரணைகளை நடத்த வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி ஆணையிட்டிருந்தார். இது தொடர்பாக கசற் அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆட்கள் கடத்தப்பட்டதற்கும், காணாமல் போவதற்கும் காரணமாக இருந்தவர்களை அடையாளம் காண்பதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் ஆணையாகும். என்ன நடக்கின்றது? ஆட்கள் காணாமல் போயிருப்பது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற இந்த ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் தனது விசாரணைகளை ஆரம்பித்தது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம் என பல இடங்களில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இப்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக மன்னார் மாவட்டத்தில் விசாரணைகளை நடத்தவுள்ளது. இதுவரையில் நடைபெற்ற விசாரணைகளில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காணாமல் போயுள்ள தங்களுடைய பிள்ளைகளுக்கும், கணவன்மார்களுக்கும் என்ன நடந்தது, எப்படி நடந்தது, எங்கே நடந்தது, யாரால் நடந்தது என்பதுபற்றிய பல விபரங்கைளப் பலரும் தமது வாக்குமூலங்களிலும் சாட்சியங்களிலும் தெளிவாக எடுத்;துக் கூறியிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்தவுடன், மோதல்களில் உயிர் தப்பியிருந்த விடுதலைப்புலிகளை நோக்கி, பொது மன்னிப்பும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட இராணுவத்தினரின் ஒலிபெருக்கி அறிவித்தலையடுத்து, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமது பிள்ளைகளையும், கணவன்மாரையும் ஆயிரக்கணக்கான உறவினர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

அவர்களில் பலருக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை. தங்களால் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக உறவினர்கள் பலரும், இராணுவத்திடம் மட்டுமல்லாமல், காவல்துறையினர், காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வரும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு மனித உரிரமைகள் ஆணைக்குழு என பலதரப்பட்டவர்களிடமும் கால்தேய அலைந்து விசாரித்திருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், உயிருடன் இருக்கின்றார்களா அல்லது கொல்லப்பட்டுவிட்டார்களா என்ற விபரம் எதனையும் அவர்களால் பெற முடியவில்லை. காயமடைந்த நிலையில் அல்லது நல்ல தேகாரோக்கியத்துடன் பொறுப்பேற்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவத்தினரோ, அவர்களுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சோ அல்லது அரசாங்கத்தின் முக்கிய அம்சமாக இருக்கின்ற பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்தவர்களோ இதுவரையில் வாய் திறக்கவில்லை.

இராணுவத்தின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூற வேண்டிய பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதி ஆகியோரும் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, எங்கே இருக்கின்றார்கள் என்ற தகவல்கள் தெரியாத நிலையில் உள்ளவர்கள் பற்றி பாராமுகமாகவே இருக்கின்றார்கள்.

கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு குழுவொன்றை நியமித்து, விசாரணைகளை நடத்துமாறு பொறுப்போடு, நடந்து கொண்டுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும், இந்த நாட்டில் யுத்தத்தை முன்னின்று நடத்தி முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற வகையிலும், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் எந்தவிதமான பொறுப்பையும் கூறாமல் இருப்பது பலதரப்பினர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

விசாரணைகளில் வெளியான தகவல்கள் கடத்தப்பட்டவர்கள், மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய பல்வேறு விடயங்களை காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் இந்த ஆணைக்குழுவினரிடம் தெரிவித்திருக்கின்றார்கள். எவ்வாறு கடத்தப்பட்டார்கள், எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது பற்ற்pய விபரங்கள் அவர்களுடைய சாட்சியங்களில் அடங்கியிருந்தன.

இவற்;றில் அரசாங்கத்தை நேரடியாகத் தொடர்புபடுத்தக் கூடிய விடயங்கள் சிலவற்றில் இருந்தன. சிலவற்றில் அத்தகைய விபரங்கள் இருக்கவில்லை. எனினும், இந்த விடயங்களை உள்ளடக்கிய காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

ஆயினும் அரசாங்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட விடயங்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவற்றைப் பற்றியே இங்கு கவனம் செலுத்தப்படுகின்றது. முக்கியமான எல்லா விடயங்களையும் குறி;ப்பிட்டு அதுபற்றி, ஆராய்வதும், விமர்சனம் செய்வதும், இந்தப் பத்தி;யில் கடினமான விடயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நான்கு நாள் விசாரணைகளின்போது முதல் இரண்டு நாட்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்தவர்களில் நடராசலிங்கம் திலகவதியும் ஒருவர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு விசாரணைக்கான அழைப்பு கிடைக்கவில்லை.

ஆயினும் விசாரணையில் தனது ஏக்கத்தையும் கவலைகளையும் வெளிப்படுத்தி, காணாமல் போயுள்ள தனது மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு விசாரணைக்குழுவினரிடம் கோருவதற்காகக் காத்திருந்தார். ‘என்னுடைய மகள் விடுதலைப்புலிகள் இயக்கம் பிடித்துப் போயிருந்தார்கள்.

இயக்கத்தில் அவர் இருந்தது உண்மைதான். ஆனால் சண்டைகள் முடிந்தபின்னர், அவர் வட்டுவாகல் பாலம் வழியாக இராணுவத்திடம் போய் சரணடைந்ததைக் கண்டவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

அது மட்டுமல்ல. இராணுவ ட்ரக் வண்டியில் வேறு பிள்ளைகளுடன் என்னுடைய மகள் இருந்த படம் உதயன் சுடரொளி பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது. அந்தப் படம் என்னிடம் இருக்கின்றது. என்னுடைய மகளை இராணுவம் கொண்டு சென்றது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை. அப்படி கொண்டு செல்லப்பட்ட என்னுடைய மகள் எங்கே? இதைத்தான் நான் இராணுவத்திடமும், இந்த அரசாங்கத்திடமும் கேட்கின்றேன். ஏன்னுடைய மகளைக் கொண்டு போய் சுட்டுக் கொன்றுவிட்டீர்களா, அப்படியானால் அதைத்தன்னும் நீங்கள் பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் என்ற வகையில் எனக்கு சொல்லலாம்தானே? என்னுடைய மகளையும் வேறு பிள்ளைகளையும் கொண்டு சென்ற இராணுவம் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம்?’ என்று அவர் வினா எழுப்பினார்.

திலகவதியைப் போன்று எத்தனையோ தாய்மார்களும் மனைவிமார்களும் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மார்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். ஆனால் அரசாங்கத்திடமிருந்து அதற்கான பதில் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

அவர்களை ஆறுதல்படுத்தத்தக்க வார்த்தைகள் கூட அரச தலைவரினாலும், அரச தரப்பினராலும் வெளியிடப்படவில்லை என்பது குறித்துக் காட்டத்தக்கதாகும். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சிவபாதம் டோஜினி விடுதலைப்புலிகளினால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்தார்.

இயக்கத்தில் இருந்த அவர் இறுதி யுத்தத்தின்போது, காயமடைந்து புல்மோட்டை பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். காலிலும் நெஞ்சிலும் காயமடைந்திருந்த தனது தங்கையை புல்மோட்டையில் அப்போது, நேரடியாகக் கண்டிருந்த பெண் ஒருவர் தன்னிடம் நேரில் தெரிவித்ததாகக் காணாமல் போயுள்ள டோஜினியின் சகோதரராகிய சிவபாதம் குகநேசன் ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் கூறியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் வெளியிடப்பட்டு வந்த ஈழநாதம் பத்திரிகையின் செய்தியாளராக இருந்தவரே அந்தப் பெண் என்றும், அவரே தனது தங்கையை புல்மோட்டையில் நேரடியாகக் கண்டிருந்தார் என்பதையும் குகநேசன் தனது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இந்தத் தகவலின் மூலம் இராணுவத்தினருடைய பொறுப்பில் தனது தங்கை இருந்தார் என்பதை அவர் தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தியிருக்கி;ன்றார். ஆனால், இராணுவத்தின் பொறுப்பில் இருந்த அவர் பின்னர் வெளிநாடொன்றில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தது பற்றிய தகவலும் தமக்குக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கிடைத்திருப்பதாக அவர் தனது சாட்சியத்தில் விபரம் கூறியிருக்கின்றார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னமணி என்ற பெயருள்ள தனது சகோதரனின் மகள் சவூதியில் பணிப்பெண்ணாக வேலை செய்வதாகவும், அவருடன் டோஜினியும் பணிப்பெண்ணாக பணியாற்றி வருவதாகவும் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் சின்னமணியின் சகோதரியாகிய ஜசிந்தா என்ற பெண்ணின் மூலம் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் குகநேசன் மேலும் விபரம் வெளியிட்டிருக்கின்றார்.

டோஜினி தனது தாய் மற்றும் சகோதரர்கள் பற்றிய தகவல்களை தனது நண்பியிடம் தெரிவித்து, அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று விசாரித்து தெரிவிக்குமாறு கேட்டிருந்ததாகவும், இந்தத் தகவலை சின்னமணி தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜசிந்தா என்ற பெண் தன்னிடம் நேரடியாகக் கூறியதாகவும் குகநேசன் கூறியுள்ளார்.

ஆயினும் சின்னமணியின் ஊடாக தனது தங்கை டோஜினியின் விபரங்களையோ அல்லது தொடர்புக்குரிய தொலைபேசி இலக்கத்தையோ பெற முடியாதிருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள குகநேசன் அவரைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியிருக்கின்றார்.

இராணுவத்தின் பொறுப்பில் இருந்த டோஜினி எப்படி சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றார்? அவரை அங்கு அனுப்பிவைத்தது யார்? ஏதோ ஒரு வகையில் அவர் அங்கு சென்றிருந்தாலும், அவர் ஏன் தங்களுடன் – குடும்பத்தினருடன் இது வரையிலும் தொடர்பு கொள்ளவில்லை? – இதுபோன்ற பல வினாக்களுக்கு டோஜினியின் சகோதரன் விடை தேடிக் கொண்டிருக்கின்றார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த ஒரு பெண் அரபு நாடொன்றில் பணிப்பெண்ணாகப் பணியாற்றச் சென்றிருக்கின்றார் என்ற தகவலின் உண்மைத் தன்மை அது எவ்வாறு சாத்தியமாகியது என்பதை குகநேசன் போன்ற வன்னியில் உள்ள சாதாரண பிரஜைகளினால் கண்டறிவதென்பது இயலாத காரியமாகும்.

முக்கியமாக தமிழ்ப்பெண் ஒருவர் அரபு நாட்டிற்குத் தனது சொந்தப் பெயரில் சொந்த அடையாளத்தில் வேலை தேடிச் செல்வதற்கான வாய்ப்பே கிடையாது. தமிழ்ப்பெண்களை, முஸ்லிம் பெண்களாகப் பெயர் மாற்றம் செய்து, அதற்குரிய கடவுச்சீட்டுக்களைப் பெற்று அங்கு அனுப்பி வைப்பதற்கென நாட்டில் பல முகவர் நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்த இரகசியமாகும்.

இராணுவத்தின் பொறுப்பில் இருந்த டோஜினி எப்படி இவ்வாறான மாற்றத்திற்கு உள்ளாகிச் சென்றார் என்பது நிச்சயமாகக் கண்டறியப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதுவிடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவும் அரசாங்கமும் கூடிய கவனம் செலுத்தி உண்மையில் என்ன நடந்தது, டோஜினி சவூதியில் இருப்பதன் உண்மைத் தன்மை என்ன என்பது போன்ற விடயங்களைக் கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றம் வகையில் அரசாங்கத்தின் நேரடி பொறுப்பில் இருந்து காணாமல் போயுள்ளவர்களின் நிலைமைகள் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து அவர்கள் வெளிப்படுத்துவார்களா அல்லது விசாரணை அமர்வுகளை மாத்திரம் நடத்திவிட்டு பெயரளவில் விசாரணை அறிக்கையொன்றை வெளியிட்டு, அதனையும் கிடப்பில் போட்டுவிட்டு பேசாமல் இருப்பார்களா? என்ன செய்யப் போகின்றார்கள்?

-செல்வரட்னம் சிறிதரன்

TAGS: