“தமிழீழம்” தான், தம்பி பிரபாகரனின் பலமும், பலவீனமும்..! – “புளொட்” தலைவர் சித்தார்த்தன் தெரிவிப்பு!!

prabhakaran01தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்..,

“கடந்த 25வருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் மூத்த அரசியல் தலைவருமான அமிர் அண்ணர் (அமிர்தலிங்கம்) இறந்த நாள் தொடக்கம் எமது தலைவர் உமாமகேஸ்வரன் இறந்த நாள் வரையான காலப்பகுதியை ‘வீரமக்கள் தினமாகக் கடந்த 25 வருடங்களாக நினைவுகூர்ந்து வருகின்றோம். இன விடுதலைக்கான போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அனைவரையும் நினைவு கூருவதென்பது, அவர்கள் முன்னெடுத்த இன விடுதலை கொள்கைகளை தொடர்ந்து நாமும் முன்னெடுத்து இலக்கினை அடைய உறுதியுடனிருப்பதையே குறித்து நிற்கின்றது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த காலங்களிலிருந்த சர்வதேச அரசியல் ஒழுங்கானது விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையிலும் சாதகமானதாக அமைந்தது. எமது இலட்சியத்தை அடைவதற்கான தந்திரோபாயங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவானதும், சாதகமானதுமான நிலைப்பாடுகள் வெளிப்பட்டன.

விரும்பியோ, விரும்பாமலோ பிராந்திய அரசியல் தேவைகளும் எமது போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவனவாகவே இருந்தன. அத்துடன் சர்வதேசத்தின் தேவைகளை எமக்கு சாதகமாக பாவிக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் அன்றிருந்தன. பின்னர், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறத் தொடங்கும்போது அதற்கேற்ப எமது விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ள நாம் தவறி விட்டோம். இதுவே எமது இன்றைய நிலைக்கு காரணமென எனது பார்வைக்கு புலப்படுகின்றது. மாறுபடும் சர்வதேச ஒழுங்குகளை கவனத்திலெடுத்து அதற்கொப்ப எமது போராட்ட வடிவங்களையும், அணுகுமுறைகளையும் நாம் மாற்றியிருந்திருக்க வேண்டும்.

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்ஸின் கூற்றுக்கேற்ப, நாமும் மாற்றங்களுக்கு உட்பட்டு எமது திசைவழிகளை மாற்றி இலக்கிற்கான பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும். அதேபோல் எமது போராட்டத்திற்கு மிக முக்கிய பின்னடைவாக அமைந்தது எமக்குள் ஒன்றுமையின்மையே என்பதும் மறுதலிக்க முடியாதது. ஓர் ஆயுதப் போராட்டம் நடைபெறும் சமூகத்தில் ஆயுதமேந்திய போராட்ட குழுக்கள் தமக்கிடையே ஏற்படும் சிறுசிறு முரண்பாடுகளை ஆயுத முனையில் தீர்க்க முற்பட்டதும், அதன் விளைவுகளும் குறித்து நான் இங்குள்ள எமது மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ‘ஏகம்’ என்ற சிந்தனையில் உருவான சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்கவே நாம் போராட முற்பட்டோம். அதே ‘ஏகம்’ என்ற சிந்தனை எம் ஒவ்வொருவருக்குள்ளும் குடிகொண்டது.

அது எமது சிந்தனைக்குள் வரத் தொடங்கிய காலத்திலிருந்தே எம்மையுமறியாமல் நாம் ‘ஜனநாயக விரோதி’களாகி விடுகிறோம். இது வெறும் ஆயுத போராட்ட தலைமைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பொருந்தும். இதனை நான் கூறுவதற்கு அஞ்சவோ, வெட்கப்படவோ தேவையில்லையென்றே கருதுகின்றேன்.

எமது தவறுகளை நாமே உணர்ந்து சரியான பாதையில் பயணிக்காவிடின் இப்போது உள்ள சோக வரலாறு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தலைமைகள் விடும் தவறுகளே அந்த சமூகத்தை இழி நிலைக்குள் தள்ளி விடுகின்றது. எது எவ்வாறாயினும், பல கோணங்களிலே நின்ற நாங்கள் அனைவரும் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரு அணியாக ஒற்றுமைப்பட்டுள்ளோம்.

தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம், அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவேயாகும். பிரபாகரன் தமிழீழத்தை ஒருபோதும் கைவிட மாட்டார், புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என தொடர்ந்து வந்த அரசுகள் கூறிவந்ததை நம்பிய சர்வதேசம், – முக்கியமாக எங்களுடைய பிரச்சினையில் அக்கறை கொண்டிருக்கின்ற நாடுகளான இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் – இறுதியுத்தத்தின் போது அரசிற்கு மிகப்பெரிய அளவிலே ஆதரவைக் கொடுத்தன. விடுதலைப் புலிகள் என்றுமே ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வர மாட்டார்கள் எனக் கருதியே சர்வதேசம் யுத்ததிற்கு துணை புரிந்தது.

இன்று இதுகுறித்து அவர்கள் எங்களுடன் அளவளாவும் போது, அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்ற ஒரு மனத்தாங்கலை வெளிப்படுத்துவதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இன்று சர்வதேச நாடுகள் அனைத்தும் யுத்த காலத்தில்கூட இல்லாத அளவிற்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அதிக கரிசனை கொள்கின்றன. அது எங்களுடைய ஒற்றுமையின் விளைவுதான் என்பதில் சந்தேகமில்லை. எங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது.

சர்வதேசத்திலே வாழுகின்ற பல தமிழ் அமைப்புகளும், புலம்பெயர் தமிழர்களும் காட்டிய அக்கறையும், அவர்களுடைய செயற்பாடுகளும் இந்த ஜெனீவா தீர்மானம் மாத்திரமல்ல, சர்வதேசமும் எங்கள் மேல் அக்கறை எடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றன என்பது யாவருமறிந்ததே. தொடர்ந்தும் புலம்பெயர் மக்கள், தமிழ் மக்களுடைய ஒரு நியாயமான தீர்வுக்காக தங்களுடைய அர்ப்பணிப்புக்களைச் செய்ய வேண்டும். போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன விடுதலைக்காக வழங்கிய தார்மீக, பொருளாதார ஆதரவுகள் காலத்தால் அழியாதன. அவர்களின் அந்த பலம் இல்லாமல் போராட்ட வரலாறு இவ்வளவு நீண்டிருக்க முடியாது.

இவையாவும் வீணாகி விட்டதேயென நாம் சோர்ந்து விடவோ அல்லது துக்கித்துக் கொண்டோ இருந்துவிடத் தேவையில்லை. மாறாக, தாயகத்தில் நலிந்து போயுள்ள எமது உறவுகளுக்கு தங்களாலான பொருளாதார, மனோபலங்களை வழங்கி அவர்களையும் வருங்கால எமது சந்ததியினரையும் வளமான, அறிவார்த்தமானவர்களாக உருவாக்க வேண்டும். இதனூடாக எமது இனத்தின் இருப்பை மீண்டும் வலுவானதாக்க வேண்டும். பெருமளவிளான எமது உறவுகள் புலம்பெயர்ந்த நிலையில், தாயகத்தில் நாம் சகல வகைகளிலும் பலமற்றவர்களாக்கப்பட்டுள்ளோம். இந்நிலையை மாற்ற புலம்பெயர் சமூகம் உதவுகின்றது. அது இன்னும் பெரிய அளவில் உதவ வேண்டும். அவ்வாறு உதவிகளை வழங்கி இந்த மக்களை வாழவைக்க வேண்டும்.

முக்கியமாகக் கல்வி மேம்பாட்டுக்காக தங்களுடைய உதவிகளை பாரிய அளவில் தொடர வேண்டும். இவ்வாறு புலம்பெயர் சமூகம் உதவுவதன் மூலம்தான் தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்தக் கால்களிலே நிற்கும் பலம் பொருந்திய சமூகமாக உருவாக்க முடியுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒற்றுமை ஒன்றே இன்று எமது பலமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளில் நாம் மென்மேலும் பலப்பட்டு ஒற்றுமையாக எமது உரிமைகளுக்காக ஒரே குரலில் ஓங்கியொலிக்க வேண்டும். மக்களின் உண்மையான விடுதலையை வென்றெடுப்பதே தமது இன்னுயிரையீந்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம். வரலாறு எம் மக்களின் வாழ்வை மீட்டுத் தரும்” என்றார்.

20140709-173634-63394610.jpg

TAGS: