பேச்சுக்களின் விபரம் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்படும் – ரமபோசா தெரிவிப்பு

cyril-ramaphosa1சிறிலங்காவில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக, இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் சிறில் ரமபோசா.

இந்தப் பயணத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் போதே, இதுகுறித்து அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பிலும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்திலும் நடந்த சந்திப்புகளின் போது, தென்னாபிரிக்காவின் இந்த முயற்சி குறித்து, இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதா என்று வினவப்பட்டதாகத் தெரியவருகிறது.

அத்துடன் இந்தியாவும், மேற்குலகமும், முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தென்னாபிரிக்காவின் முயற்சிகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போதே, பேச்சுக்களின் முன்னேற்றங்கள் குறித்து, இந்தியாவுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று, தென்னாபிரிக்கத் துணை அதிபர் சிறில் ரமபோசா உறுதி அளித்துள்ளார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடமும், இந்திய ஊடகம் ஒன்றிடமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு, சிறில் ரமபோசா புதுடெல்லி சென்று இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பார் என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், பின்னர், அந்தப் பயணத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS: