யார் வந்தாலும் அவர்களுக்கு மாலை மரியாதை கொடுத்து வந்தவரைக் குளிரப் பண்ணி அவரின் கடமையை திசைதிருப்பும் யுக்திகளுக்கு இலங்கையில் குறைவேயில்லை.
இதன் காரணமாக இலங்கைக்கு தூது வருகின்றவர்களின் நோக்கம் சிதைவடைந்து போகின்றது.
உண்மையில் தூது வருவோர் அரசிடமிருந்து எந்த உபசரணையையும் வரவேற்பையும் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பது பொது நியதி. ஆனால் இலங்கையில் அந்த நியதியைக் கடைப்பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றாகி விடுகின்றது.
இதற்கு அப்பால், தூது வருகின்றவர்கள் நாங்களும் தூது சென்றோம். நாங்களும் சமாதான முயற்சியில் பங்கெடுத்தோம் என்று பெயர் எடுப்பவர்களாக இருக்கின்றனரே தவிர, அவர்கள் தங்களின் தூது முயற்சி வெற்றியளிக்கக் கூடிய அதிகாரத்தை உடையவர்களாக இருப்பதில்லை.
இலங்கையில் நடந்த சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக வந்த நோர்வேத் தூதுவர் எரிக் சொல்யஹய்மின் சமாதான முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
மாறாக அவரின் சமாதான முயற்சிக்கு சந்தர்ப்பம் கொடுத்ததுதான் தமிழர் தரப்பின் தோல்விக்கும் இழப்பிற்கும் காரணம் என்று கூறுமளவில் நிலைமை உள்ளது.
ஆக, வல்லமையற்ற, அதிகாரமற்ற நாடுகளின் தூது முயற்சி ஒரு தரப்பிற்குத் தோல்வியைக் கொடுக்கும் என்ற உண்மையை தமிழர்களாகிய நாம் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.
எனவே தூது முயற்சியில் ஈடுபடுவோரின் அதிகாரம், தகைமை, அவர் தனது தூது தொடர்பில் எடுக்கக்கூடிய இறுதித் தீர்மானம் என்பன குறித்த பலம், பலவீனங்களை நாம் அறிய வேண்டும்.
இதை விடுத்து யார் வந்தாலும் ஐயா வாருங்கள் என்று கைகூப்பும் அளவில் எங்கள் நிலைமை இருக்கக் கூடாது.
அதேநேரம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாயின் எந்த நாடு முயற்சி செய்தால் அது சாத்தியமாகும் என்று பார்ப்பதும் அவசியம். அவ்வாறானதொரு நோக்கில் இலங்கையைப் பொறுத்தவரை இந்திய அரசு எடுக்கக் கூடிய சமாதான முயற்சி, சமாதானத் தூது என்பனவே ஒரு முடிவைத் தரக்கூடியதாக இருக்கும்.
எனினும் அப்படியானதொரு முயற்சியை காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா செய்திருக்காது; செய்திருக்கவும் முடியாது.
ஆனால் இப்போது மோடியின் அரசு இந்தியாவை ஆள்கிறது. எனவே இப்போது இருக்கக் கூடிய மோடியின் அரசு இலங்கையில் சமாதான முயற்சியை மேற்கொள்வதே பொருத்தமானதாகும்.
ஆயினும் அதற்கான கோரிக்கையை இலங்கை அரசு விடுக்கும் என்று யாரேனும் கருதினால் அதுவே முதற்தர மடமைத்தனமாக இருக்கும்.
எனவே சமாதான முயற்சியை முன்னெடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்பிடமே உண்டு.
இருந்தும் தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் போது இந்தியா எட்டி நிற்கவே செய்யும்.
சமாதானத் தூது முயற்சியில் இன்னொருவர் ஈடுபடும் போது அது விடயத்தில் இந்தியா மூக்கை நுழைக்க விரும்பாது. அதேநேரம் முயற்சியை முறியடிக்கவும் நினைக்கலாம்.
ஆகையால் அவரும் வேண்டாம் இவரும் வேண்டாம் இந்தியாவே தூது வர வேண்டும் என்று கடும்பிடியாக நிற்பதே தமிழர்களாகிய எங்களின் முடிவாக இருக்க வேண்டும். இதுவே புத்திசாலித் தனமானதாகவும் இருக்கும்.
சமாதான பேச்சு இலங்கையிலும்,இந்தியவிளும்தான் நடக்க வேண்டுமா? மூன்றன் நாட்டில் ஏற்பாடு செய்யலாமே.அனைத்து பேச்சுவார்த்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் இன்னும் சொந்த மண்ணிலே அகதிகளாக வாழ்கின்றனர் ஈழ தமிழ் மக்கள்!!!
ஈழ தமிழ் மக்களின் துயரத்திற்கு இந்திய அரசே முக்கிய காரணம். இதை தமிழ் நாட்டு தமிழ் மக்களே புரிந்து கொள்ளவில்லை- புரிந்து கொள்ள தேவையான இன பற்று அவர்களிடம் கிடையாது.
(மோடி மைண்ட் வாய்ஸ்) இவங்கள் இன்னும் நம்மளை நம்புறாங்கள்.