தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி என்று கூறப்படும் சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயத்தை தலையீடு என்று எண்ணவில்லை, அது ஒரு கலந்துரையாடலே என்று இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிந்திய செவ்வி ஒன்றில் சிறில் ரமபோஸா வடக்கி;ன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தமையானது, இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே என்றும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ரமபோஸாவை மத்தியஸ்தர் என்ற நிலையில் அரசாங்கம் பார்க்கவில்லை. அதற்கான உறுதிமொழி தமக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது மீறப்படுமானால் அந்த வேளையில் தமது கட்சி தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
தமது கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் வழங்கியுள்ள 12 அம்சக் கோரிக்கைகளில் 4 வது அம்சமாக வெளிநாட்டு தலையீடுகளை ஏற்பதில்லை என்ற விடயம் அடக்கப்பட்டுள்ளது.
அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதை தமது கட்சி எதிர்க்கப் போவதில்லை என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.