சனல் 4 தொலைக்காட்சி காட்டியதையுமா மறந்துவிட்டீர்கள் ? நரேந்திர மோடிக்கு வைகோ கடிதம் !

vaiko_pixமிகவும் கவலை அளிப்பதும், முக்கியமானதுமான ஈழத்தமிழர் பிரச்சினையில், தற்போது ஏற்பட்டு வரும் நிலைமையை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிÞ அவர்கள், மூன்று நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்து, நமது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களோடு, மிகவும் விரிவாக, இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளில், ஈழத்தமிழர்களையும் உள்ளிட்டு எடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை அமைச்சர் விளக்கிக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையின் மகிந்த ராஜபக்சே அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை, அப்பாவிகளை, வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகளைக் கொன்று குவித்த, மன்னிக்க முடியாத இனப்படுகொலைக் குற்றத்தைச் செய்தது என்பது, மறுக்க முடியாத, நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகளின் மறுக்க முடியாத சாட்சியங்கள், தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தியதால், அனைத்து உலக சமுதாயத்தின் மனசாட்சி அதிர்ச்சியுற்றது. இதன் விளைவாக, ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்சிலில், பல நாடுகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு மனித உரிமைகளை நசுக்கிய குற்றங்கள் குறித்து, ஒரு முழுமையான விசாரணையை நடத்துவதற்கு, மனித உரிமைகள் ஆணையர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, கவுன்சில் தீர்மானம் கேட்டுக் கொண்டது. ஆனால், ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வந்த, இந்தியாவின் காங்கிரÞ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கைக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் செயல்பட்டு, இறுதி வாக்கெடுப்பில் வாக்கு அளிக்காமல் வெளியேறியது.

2011 இல், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து மூவர் குழு விசாரணையை அறிவித்தபோது, இலங்கை அரசு அதைக் கடுமையாக எதிர்த்ததோடு, உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் என்ற பெயரில், தானே ஒரு விசாரணைக் கமிசனை நியமித்துக் கொண்டது. அந்தக் கமிசனும், அரசாங்கத்தின் எடுபிடி ஏஜெண்டாக ஏமாற்று வேலை செய்தது.

தற்பொழுது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை 2014 ஜூன் மாதம் நியமித்து இருக்கின்றது. இதில் ஒருவரான மார்ட்டி அட்டிசாரி என்பவர், பின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர்தான், கொசோவாவில் ஐ.நா.சார்பில் விசாரணை நடத்தி, கொசோவா நாடு உருவாகப் பணி ஆற்றியவர். இன்னொருவரான சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து நாட்டின் முன்னாள் நீதிபதியாகவும், ஆளுநர் நாயகமாகவும் (Governer General) பொறுப்பு வகித்தவர். கம்போடியாவில் கெமர் ரூஜ் இயக்கம் நடத்திய போர்க்குற்றங்களை விசாரித்தவர். மற்றொருவர் அÞமா ஜகாங்கீர் என்ற அம்மையார், பாகிÞதான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்தவர். ஐ.நா.விலும் பணி ஆற்றியவர்.

ஆனால், இலங்கை அரசாங்கம், ஐ.நா. வின் ஜெனீவா தீர்மானத்தை எதிர்ப்பதோடு, விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு உள்ளே நுழைய விசா அனுமதி மறுத்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது பற்றியும், உண்மையைக் கண்டறிய உலக நாடுகள் அக்கறையும் கவலையும் கொண்டு இருக்கும் இந்த வேளையில், இலங்கை அரசாங்கம் நீதிக்கான கதவுகளை நிரந்தரமாக மூட முடிவு செய்து விட்டதோடு, இன்றைய இந்திய அரசாங்கத்தை ஏமாற்றி, உண்மைகளை ஆயிரம் அடிகளுக்குக் கீழே குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பொய்வேடம் போடுகிறது. இதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால், இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான அக்பருதீன் என்பவர் கூறும்போது, 2014 ஜூலை 11 இல், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாததை நியாயப்படுத்தி உள்ளார்.

இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் புரிந்த முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாடுதான், இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடா? இந்தியக் குடிமக்களான தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்பூழ்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலட்சக்கணக்கானோர் சிங்கள அரசால் படுகொலைக்கு உள்ளாக, காங்கிரÞ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இராணுவ தளவாடங்களையும் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கிய கொடுமையைச் செய்தது என்பதை, மிகுந்த வேதனை தாக்கும் இதயத்தோடு சுட்டிக் காட்டுகிறேன். இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகத்தை வெளிப்படுத்தி, இந்திய மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப, தமிழ்நாட்டில் 19 தமிழர்கள் மரணத்தீயை அணைத்து மாண்டனர்.

நான் என்னுடைய பொதுக்கூட்ட உரைகளிலும் அறிக்கைகளிலும், 1999 இல், அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், இலங்கைக்கு எவ்விதமான இராணுவ உதவிகளும் அளிக்க மாட்டோம்; ஆயுதங்களை விற்கவும் மாட்டோம் என்று செயல்படுத்திய முடிவினை, அழுத்தமாகப் பாராட்டியதோடு, புதிதாக அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அதே நிலைப்பாட்டைப் பின்பற்றும் என்று தெரிவித்து உள்ளேன். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடைகளை அமுலாக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிப்பதை, கட்சி வேறுபாடு இன்றித் தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால், இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுக்கப் போவதாக இப்போது வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி தருகிறது.

இன்று இலங்கையில் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள நிலைமை மிகவும் கவலை தரத்தக்கதாக இருக்கின்றது. இலங்கை இராணுவத்தின் சித்திரவதை முகாம்கள் ஆகிவிட்டது. தமிழர்களின் பூர்வீகப் பகுதிகள் சிங்களக் குடியேற்றங்கள் ஆகிவிட்டன. ஏராளமான தமிழர்கள் காணாமல் போயினர். எண்ணற்றவர்கள் வதைமுகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் அடைபட்டு உள்ளனர். ஒவ்வொரு வீதியிலும் இராணுவம் நிற்பதனால், தமிழ்ப் பெண்கள் விவரிக்க முடியாத கொடுந்துன்பங்களுக்கு ஆளாகின்றனர். நான் குறிப்பிட்டு உள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம், இந்திய அரசும், அனைத்து உலக நாடுகளும் தீர்வு காண வேண்டும்.

இந்தியாவின் ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் வைத்து இருக்கின்றோம். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயரான துன்பமான பிரச்சினைக்கு இந்திய அரசால் நீதி வழங்கப்படாவிட்டால், தமிழர்கள் மனதில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மனதில் விரக்தியும் வெறுப்பும் ஏற்படும் என்பதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறேன். நியாயமான நல்ல நோக்கத்தோடு தங்களின் மேலான கவனத்திற்காக இந்தக் கடிதத்தை எழுதி உள்ளேன். தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய நடவடிக்கைளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டுகிறேன். நன்றி,

தங்கள் அன்புள்ள,

(வைகோ)

TAGS: