ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு! உச்சநீதிமன்றில் தெரிவிப்பு

sambanthanபிளவடையாத ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் சார்பில் உச்ச நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன்  இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் கூட்டணி கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியன இலங்கையை ஐக்கிய நாடாக ஏற்றுக்கொள்வது தொடர்பில் தெளிவான உறுதிமொழியுடன் கூடிய சத்தியக்கடதாசி ஒன்று உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் கூட்டணிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் யாப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்னிலைப்படுத்தியதாக அமைந்துள்ளது என்பதனை பகிரங்கப்படுத்துமாறு கோரி இனப்பற்றுடைய தேசிய இயக்கம் உள்ளிட்ட ஆறு அமைப்புக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளன.

இது தொடர்பிலான மனு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாக இந்த மனு தாக்கல் செய்யபட்டிருந்தது. தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியை தடை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

பல தடவைகள் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணைகள் நேற்று நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே தமிழரசுக் கட்சி செயற்படுவதாக அறிவிக்குமாறு இந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கனிஸ்கவிதாரண, பாலித கமகே, கபில கமகே ஆகியோரும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளையும் ஆஜராகியிருந்தனர்.

மனுமீதான விசாரணை ஜூலை 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

TAGS: