ஐ.நா.விசாரணைக்குழு முன் புலம்பெயர் தமிழர்கள் சாட்சியமளிக்க வேண்டும்!- தமிழ் கூட்டமைப்பு வேண்டுகோள்!

suresh-10கடந்த 15ம் திகதி முதல் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா.விசாரணைக்குழு முன்  புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சென்று சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள்  விடுத்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.

இலங்கை விவகாரம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக்குழு தனது விசாரணை நடவடிக்கைகளை ஒஸ்லோவில் ஆரம்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளமை தெரிந்ததே.

இந்த விசாரணைக்குழு இலங்கை வந்து தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. அதனால் இங்கு யுத்தத்தின் போது அத்துமீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்விவகாரம் குறித்து சாட்சியளிப்பதற்கு வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு.

இந்தப் பின்புலத்திலேயே புலம்பெயர் தமிழர்களை திரண்டு சாட்சியமளிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

ஐ.நா. விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முதற்கட்டமாக ஒஸ்லோவில் ஆரம்பமாகியுள்ளன எனத் தெரிய வருகின்றது. இனி, புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் ஐ.நா. விசாரணைக்குழு அமர்வுகளை நடத்தி சாட்சியங்களைப் பதிவு செய்யும் என நம்புகிறோம். அதனை நாம் வரவேற்கிறோம்.

புலம்பெயர் தமிழர்கள் அந்தந்த இடங்களில் அணி திரண்டு, சாட்சியமளித்து, உண்மைகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசுத் தரப்பினதும் படைகளினதும் முகமூடியைக் கிழித்து, உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கை மீதான ஐ.நா. விசாரணையைக் கோரும் தீர்மானம் செயல் வடிவம் எடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் முழு மூச்சான செயற்பாடும், அர்ப்பணமும் பிரதான காரணங்கள். தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அது முக்கிய விடயமாகப் பொறிக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஆக்கபூர்வமான நிலையில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளுள் அது ஒன்று.

அதனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினால்தான் நமது இனத்துக்கு சற்றேனும் பலன் கிடைக்கும் அந்தப் பொறுப்பும் புலம்பெயர் தமிழர்கள் மீதே மீண்டும் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் திரண்டு வந்து சாட்சியமளித்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

இறுதி யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் அவுஸ்திரேலியாவிலும் உள்ளனர். அங்கு தஞ்சம் அடைந்தும் உள்ளனர். அவர்களும் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை ஐ.நா.விசாரணைக் குழு செய்து தரவேண்டும். – இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

TAGS: