தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அந்தவகையில் விரைவில் அரச தரப்பிலிருந்து நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா இரண்டு தரப்புடனும் நடததிய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க மட்டத்தில் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சை நடத்துவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் தீர்வு ஒன்றை நோக்கி செல்வதற்கும் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷாவிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின்போது கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்கு தயாரா என்று சிறில் ரமபோஷா வினவியிருந்தார். இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதாக அதன்போது ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த நிலையிலேயே கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுவந்த இருதரப்பு பேச்சுக்கள் 2012ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முறிவடைந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்த அரசாங்கம் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வந்தால்தான் தீர்வு சாத்தியம் என்று கூறிவந்தது.
இந்நிலையில் தற்போது சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் தீர்வை நோக்கி செல்வதற்கான செயற்பாட்டை ஆரம்பிக்க கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து ஆளும் கட்சி பரிசீலித்துவருவதாக தெரியவருகின்றது.
கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைத்துவர உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேரடிப் பேச்சு விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்சவிடம் வினவிய போது பதிலளித்த அவர் கூட்டமைப்புடன் தீர்வு விடயம் தொடர்பில் இருதரப்பு பேச்சுக்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தற்போது இல்லை. சில விட்டுக்கொடுப்புக்களுடன் இந்த விடயத்தை அணுகுவதற்கு தயார் என்ற விடயத்தை உறுதிபடுத்தினார்.
அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த விடயம் குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,
அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு வர முடியாது என்று கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவந்தால் வேறு ஒரு புதிய வேலைத்திட்டத்துக்கு செல்வது குறித்தும் ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது.