இலங்கை அகதிகள் 153 பேரின் வழக்கு விசாரணை இன்று அவுஸ்திரேலியா, மெல்பேர்ணில் இடம்பெறவுள்ளது
இதன்போது இந்து சமுத்திர பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 இலங்கையர்கள் தொடர்பில் வாதவிவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த அகதிகள் ஜன்னல்கள் அற்ற, காற்றுப் புகாத கப்பல் அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அகதிகளின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த அகதிகள் கப்பல் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் 27 கிலோ மீற்றர் பகுதியில் வைத்து இடைமறிக்கப்பட்டமையால் அவுஸ்திரேலியா இந்த அகதிகளை தடுத்து வைக்க முடியாது என்று சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.
அத்துடன் குறித்த அகதிகள் அவுஸ்திரேலிய கடற்படையினருடன் தொடர்புகளை பேணும் அளவுக்கு ஆங்கில அறிவை கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் திருப்பிய அனுப்பப்பட மாட்டார்கள்- அவுஸ்திரேலியா
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பைச் சென்றடைந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் அவுஸ்திரேலிய அரசாங்கம், அந்நாட்டு உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் உயர் நீதிமன்றில் வழக்கத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ம் திகதி இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடுக் கடலிலேயே தடுத்து வைத்திருந்தனர்.
72 மணித்தியால முன் அறிவித்தல் இன்றி இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது
மேலும், இலங்கை அகதிக் கோரிக்கையாளர்க்ள தொடர்பில் எதிர்மனு தாக்கல் செய்ய அரச சட்டத்தரணிகளக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.