போர்க்குற்றம் தொடர்பில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்கிறேன்: சர்வதேச நிபுணர்- ஆணைக்குழுவின் நடவடிக்கையை ஐ.நா உன்னிப்பாக அவதானிப்பு

desmond_de_silva_001இலங்கை ஜனாதிபதியால் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்காக நியமிக்கப்பட்ட மூன்று சர்வதேச ஆலோசனை நிலை நிபுணர்களின் தலைவர் நியாயமான விசாரணையை முன்னெடுக்கவே தாம் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச ஆலோசனை குழு ஒன்றை ஜனாதிபதி கடந்த வாரத்தில் நியமித்தார்.

இதன் தலைவராக சேர் டெஸ்மன்ட் டி சில்வா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். இதனை தவிர சேர் நைஸ் ஜியோப்ரி மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமது நியமனத்தை மரியாதைக்குரியதாக கருதுவதாக ஆலோசனைக்குழு தலைவர் டெஸ்மன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுக்க தாமும் தமது உறுப்பினர்களும் எதிர்பார்ப்பதாக அவர் இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய சட்டத்தரணியான சேர் டெஸ்மன் டி சில்வா, 2010 ஆம் ஆண்டு சியாராலியோன் போர்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவில் அங்கம் பெற்றவராவார்.

இதேவேளை தமது கோரிக்கைக்கு அமையவே இந்த சர்வதேச நிபுணர்களை ஜனாதிபதி நியமித்ததாக காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கையை ஐ.நா உன்னிப்பாக அவதானிப்பு

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு ஜனாதிபதியினால் விஸ்தரிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தாம் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அலுவலகத்தின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில்லி இது தொடர்பில் கருத்துரைக்கையில்,

இலங்கை ஜனாதிபதியின் ஆணைக்குழு விஸ்தரிப்பு நடவடிக்கையை கவனத்தில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது அலுவலகம் எப்போதுமே உள்ளூர் விசாரணை பொறிமுறையை வரவேற்கிறது. அத்துடன் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதிலும் தாம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் குறித்த விசாரணையின்போது சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாட்சிகள் சுயாதீன சாட்சியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதை தாம் வரவேற்பதாக கொல்வில்லி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவை அனைத்தையும் விஸ்தரிக்கப்பட்ட காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு நிறைவேற்றுகிறதா? என்று உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக கொல்வில்லி குறிப்பிட்டுள்ளார்.

TAGS: