இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் விசாரணையை நடத்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இதனடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக சர்வதேச நிபுணர்கள் மூவரை, இலங்கை அரசாங்கம் நியமிக்க வேண்டியேற்பட்டது என்று இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்துகின்ற போதும் அதன் வெளிப்படுத்துகை நிச்சயமாக சர்வதேசத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது.
எனவேதான் அந்த குழுவுடன் இணைந்த வகையில் சர்வதேச நிபுணர்கள் மூவரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று ஜனாதிபதி சர்வதேச நிபுணர்களை நியமிக்கும் வரையில், இலங்கையில் படையினரால் போர்குற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே விசாரணைகள் அவசியம் இல்லை என்ற கருத்தையே இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தி வந்தது.
எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை குழு தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க இலங்கை அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்தே தமது உள்நாட்டு விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை சர்வதேச நியமத்துக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்ததாக என்று ஆங்கில செய்தித்தாள் கருத்தை வெளியிட்டுள்ளது.