த.தே.கூட்டமைப்பைத் தடை செய்ய, அது மண் குதிரை அல்ல: அரியநேத்திரன் எம்.பி

ariyammp-09தமிழர்களின் பலமிக்க கட்சியான த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதென்பது சர்வ சாதாரணமான விடயம் அல்ல என்பதனை ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அண்மையில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டாக இணைந்து த.தே.கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்துக்கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது வடகிழக்கு மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற ஜனநாயகக் கட்சி. 65 வருட காலமாக இந்த மண்ணிலே பல அர்ப்பணிப்புக்களை செய்து அனாதரவாய் நிற்கும் எமது தமிழ் மக்களின் அரசியல் பலமாக இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே கட்சி என்பதனை இரண்டு இனவாதக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதென்பது உலக அரங்கிலே உள்ள அனைத்து தமிழர்களையும் தடை செய்வதற்கு ஒப்பானதாகும்.

இன்று எமது விடுதலைப் பயணம் சர்வதேச ரீதியாக பரிணமித்து தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டியே சகல நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் காலமாக இக்காலம் அமைந்திருக்கின்றது.

இதனை பொறுத்துக் கொள்ளாத சிங்கள இனவாதிகளும், அந்த இனவாதக் கட்சிகளின் ஊதுகுழலாய் செயற்படும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான மொஹகமட் முஸ்ஸமில் போன்றவர்களும், அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்து கொண்டு வடகிழக்கு மக்களுக்கான உரிமைக்குரலாய் எஞ்சியிருக்கும் த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதற்கு ஆலோசனை கூறுகின்றார்கள்.

இவர்களால் முடிந்தால் வடகிழக்கு மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை வழங்கும் படி அரசாங்கத்திற்கு ஏன் ஆலோசனை வழங்க முடியாது? த.தே.கூட்டமைப்பு சட்டதிட்டங்களை ஒதுக்கிவிட்டோ, நீதிக்கு முரணாகவோ செயற்படவில்லை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்யும் அநீதிக்கு எதிராகத்தான் குரல் கொடுக்கின்றோம்.

நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராகவோ சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ செயற்படவில்லை இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றால் அந்த நாட்டிலே வாழும் சகல இன மக்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் அவ்வாறு சம உரிமை இருந்தால் மாத்திரம்தான் அந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் நாட்டுப்பற்று இருக்கும்.

இந்த நாட்டிலே உரிமை இல்லாத எமக்கு எவ்வாறு நாட்டுப்பற்று வரும் என்பதனை மாற்று அரசியல் கட்சிக்குப் பின்னால் சோரம் போகும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் த.தே.கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் இருக்கும் இனவாதிகள் இவ்வாறான கருத்தை கூறும் போது த.தே.கூட்டமைப்பு தேவையா, இல்லையா என்பதனை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

த.தே.கூட்டமைப்பை தடை செய்து தமிழ் மக்களுக்கு வாய்ப்பூட்டை போட்டுவிட்டால் இனி ஒரு தமிழர் என்ற இனத்தையே இல்லாமல் செய்வதற்கான செயற்பாடே இதுவாகும். இதனை தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

TAGS: