இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை 15ஆவது நாளாக நீடித்த சண்டையில் இதுவரை 604 பாலஸ்தீனர்களும், 29 இஸ்ரேல் வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இழுபறி நீடித்து வருகிறது.
காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 8ஆம் தேதி முதல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் முக்கியப் பள்ளிவாசல்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஒரு விளையாட்டு அரங்கத்தையும், மறைந்த ஹமாஸ் தீவிரவாத ராணுவப் பிரிவு தலைவரின் வீட்டையும் குறிவைத்து இஸ்ரேல் குண்டுகளை வீசியது.
இதுகுறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 70 பேர் படுகாயமடைந்தனர். மத்திய காஸாவின் டெயீர் எல்-பாலா பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலில் பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தினர் 5 பேரும், கான் யூனிஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ஒரே நாள் இரவில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதுவரை 604 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், குழந்தைகளும், பெண்களும் ஆவர். 3,640 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
இஸ்ரேல் வீரர்கள் பலி: இதனிடையே, இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “”ஹமாஸ் தீவிரவாதிகள் திங்கள்கிழமை இரவு முழுவதும் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 7 பேரும், பொதுமக்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம் இஸ்ரேலியர்களின் உயிரிழப்பு 29ஆக உயர்ந்துள்ளது. ஒரு வீரரைக் காணவில்லை. 22 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் மேற்குக்கரை, காஸா ஆகிய பகுதிகளுக்கு தனது நாட்டவர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
போர் நிறுத்த முயற்சி: இந்த நிலையில், சி.என்.என். தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில், “”மக்களிடம் நிலையான அமைதியை ஏற்படுத்தினால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம்” என்றார்.
எனினும், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, எகிப்து தலைவர்கள் மற்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
1 லட்சம் பேர் தவிப்பு: இதனிடையே, இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை தாக்குதல் தீவிரமடைந்ததையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.