யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம் தேவைக்காக எடுக்கப்படவுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, அதனை காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம்களுக்காகப் புதிதாக காணிகள் சுவீகரிக்கப்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கொழும்பில் செய்தியாளர்களிடம் புதனன்று தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான ஒரு சம்பவம் அச்சுவேலியில் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆயினும் அச்சுவேலியில் இராணுவ முகாமுக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக சிலர் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அது உண்மைக்குப் புறம்பானது என்றும் இராணுவ பேச்சாளர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ள கருத்தே உண்மைக்குப் புறம்பானது என்று, இது குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
“விவசாய பிரதேசமாகிய அச்சுவேலியில் வெங்காயச் செய்கையின் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, ஒரு காணியை விலைக்கு வாங்கி, அங்கு ஒரு கட்டிடத்தை அவர்கள் அமைத்திருந்ததாகவும், அந்தக் கட்டிடத்தைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அயலில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 54 பரப்பு காணிகளை கூவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.”
இந்த காணிகளைக் கையகப்படுத்தும் நோக்கத்தில் அவற்றை அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் அங்கு வந்திருந்ததாகவும், அவர்களை அளவீடு செய்யவிடாமல் பொதுமக்கள் எதிர்த்து, தடுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகவும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.
இதேபோன்று எழுதுமட்டுவாளிலும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியை அளப்பதற்காக வந்திருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த எதிர்ப்பையடுத்து திரும்பிச் சென்றனர் என ஐங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் குடாநாட்டில் 26 ஆயிரம் ஏக்கர் காணிகளில் இராணுவ முகாம்கள் இருந்ததாகவும், அது இப்போது ஆறாயிரத்து ஐநூறு ஏக்கராகக் குறைந்திருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். -BBC