இந்தியாவின் இரட்டைவேடம் – இஸ்ரேலுக்கு ஒன்று சிறீலங்காவிற்கு ஒன்று!

india-sri-lankaபாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி ஆராய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட 29 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. 17 நாடுகள் நடுநிலை வகித்தன.

கடந்த மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருந்தது.

குறிப்பிட்ட ஒரு நாட்டை இலக்கு வைத்துக் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்று, இந்தியத் தரப்பில் நியாயம் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், இஸ்ரேலுக்கு எதிரான விசாரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: