படகில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், ஆஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படும் இந்த 157 பேரையும் இந்திய தூதரக அதிகாரிகள் வந்து சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்க்கும் வரை ஆஸ்திரேலிய மண்ணில் வைக்கப்படும் இவர்களை, அதன் பின்னர் எவ்விதமாக கையாள வேண்டும் என்பதை தமது கொள்கையின் அடிப்படையிலும் சட்டங்களின் அடிப்படையிலும் ஆஸ்திரேலியா முடிவுசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்கொட் மாரிசன் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அங்கு இந்திய அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார்.
இந்தப் படகில் வந்தவர்களில் யார் யார் இந்தியப் பிரஜைகள் என்று உறுதிசெய்யும் பொருட்டு இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களைச் சந்திக்கப்பதற்கு அனுமதி வழங்க தான் சம்மதித்திருந்ததாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் கூறினார்.
கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் பற்றி விவரங்களை வெளியிடாமலேயே இருந்துவந்தது.
ஆனால் அவர்களது நிலை தொடர்பில் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வந்தனர்.
இந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் சம்பந்தமாக தொடுக்கப்பட்டுள்ள ஒரு வழக்கை ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரிக்கவுள்ளது.
படகில் ஆஸ்திரேலியா வருபோது நடுக்கடலில் தடுக்கப்பட்டிருந்த இவர்களை அங்கிருந்தே இலங்கைக்கு திருப்ப அனுப்ப ஆஸ்திரேலிய அரசு செய்த முயற்சிக்கு சென்ற மாதம் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
ஏற்கனவே அப்படி ஒரு படகை இலங்கைக்கு திருப்பி அனுப்பியமைக்காக ஆஸ்திரேலியா மீது சர்வதேச விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்தியாவிலிருந்து இப்படகு கிளம்பியிருந்ததால், இவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் ஆஸ்திரேலியா முயற்சித்திருந்தது.
ஆனால் இவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் என்று கருதப்படும் நிலையில், அனைவரையும் தாம் எடுத்துக்கொள்ள இந்தியா மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான், படகில் இருந்தவர்களை ஆஸ்திரேலிய மண்ணுக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. -BBC