சர்வதேச அமைப்புக்களை தூண்டிவிட்டு நாட்டை பிரிக்க முயற்சித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும் எனவும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் நினைக்கின்றது என அக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதை அடுத்து அது தொடர்பில் அரசாங்கத்திடம் வினவிய போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரிவினை வாதத்தினை தூண்டுவதும் நாட்டை பிளவுபடுத்த நினைப்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலையே தவிர அரசாங்கம் யாரையும் அழிக்க ஒருபோதும் செயற்படாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதனால் அரசாங்கத்திற்கு எவ்வித இலாபமும் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறானதொரு அவசியமும் எமக்கு இல்லை.
எனினும் கூட்டமைப்பின் தலைவரே அவ்வாறனதொரு கருத்தனை குறிப்பிட்டிருப்பது உண்மையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவினை ஏற்படுத்தியுள்ளதா என்று எண்ணத் தோன்றுகின்றது.
கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதெனின் அதனை தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை குற்றம் சுமத்துவது அர்த்தமற்ற ஒன்றாகும்.
அதேபோல் ஊடகங்களின் கருத்துக்கள் தனித்துவமானவை. அதனை அரசாங்கத்துடன் ஒப்பிட்டு பேசவும் முடியாது.
மேலும் இன்று சர்வதேச அமைப்புகளின் மூலம் அவர்களின் அழுத்தங்களை பயன்படுத்தி இந்த நாட்டை பிளவுபடுத்த நினைப்பது அரசாங்கமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் செயற்படுவதும் பொய்யான சாட்சிகளை தயாரித்து கொடுப்பதும் அரசாங்கமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.
இந்த நாட்டின் பிரஜைகளாக இருந்து கொண்டு தாய் நாட்டிற்கு எதிராக துரோகச் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க விடயமே.
எனினும் அவர்களுக்கும் இலங்கையில் அரசியல் செயல்களில் ஈடுபட உரிமை உண்டு. அதனை நாம் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணத்தினாலேயே இடமளித்துள்ளோம்.
எனினும் இன்று சர்வதேசத்துடன் கைகோர்த்து தாய் நாட்டிற்கு புதிதாக இந்த நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினாலேயே அழிவை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.