157 இலங்கை அகதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்

asylum_seekers_001அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 157 இலங்கை தமிழர்களும், இந்தியாவில் இருந்து வந்தமையால் அவர்கள் இந்தியர்களாக கருதப்படுகின்றனர்.

இந்தியா முழுமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்த 157 பேரும் பொருளாதார அகதிகளாக கருதப்பட்டு இந்தியாவுக்கு, திருப்பியனுப்பப்படவுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வானொலி ஒன்றில் இன்று காலை நேர நிகழ்ச்சி ஒன்றுக்கு தகவல் வழங்கிய அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இரண்டு வார காலமாக படகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 பேரும் இந்திய அதிகாரிகளின் பரீட்சிப்புக்காக மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கேட்டின் தடுப்பு முகாமுக்கு மாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நலன்களுக்கு மதிப்பு கொடுக்கும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டே அவுஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அகதிகள் யாவரும் தமிழக முகாம்களில் இருந்து சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் படகில் தங்கியிருந்த அகதிகளின் நலன்களை மேம்படுத்தவே அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வர் என்றும் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளின் இந்த படகு இந்த மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களால் இந்தியக் கரையோர பாதுகாப்பு தீவிரம்

இலங்கையர்கள் இந்தியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் நிலையில் தமது கரையோர பாதுகாப்பு குறித்து இந்திய புலனாய்வுப்பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்திய செய்திச்சேவை ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 157 இலங்கையர்களின் தகவல்படி பாண்டிச்சேரியின் இரண்டு படகு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை இந்திய அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின்படி ஏற்கனவே இந்திய முகாம்களில் தங்கியிருந்தவர்களுடன் அண்மையில் சுற்றுலா வீசா மூலம் இந்தியாவுக்கு வந்த சுமார் 40 பேரும் இந்த படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சில சிங்களவர்களும் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்தே இந்திய புலனாய்வுப் பிரிவினர் தமது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினர் தென்னிந்தியாவில் தாக்குதல் இலக்குகளை நோக்கி வருகின்றநிலையில், பாண்டிச்சேரியில் இருந்து அதிகாரிகளுக்கு தெரியாமல் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றமை பாதுகாப்பில் உள்ள குறைப்பாட்டையே சுட்டிநிற்பதாக இந்திய செய்திசேவை கூறியுள்ளது.

TAGS: