இலங்கையின் தலைநகர் கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதி தொடங்கி 20 ம் திகதி வரையுள்ள மூன்று நாட்களாக இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு நிகழ்வில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ம் ஆண்டு முதல் இராணுவக் கருத்தரங்கை அந்நாட்டு அரசு நடத்தி வருகிறது.
இதில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம், காவல்துறைகள் கையாளும் உத்திகள் உள்ளிட்டவை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 18 முதல் 20ம் திகதிவரை 3 நாட்களாக கொழும்பில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு இராணுவம் செய்துள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இராணுவத் தலைமையகத்துக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் இலங்கை இராணுவம் அழைப்பு அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அக்கருத்தரங்கில் பங்கேற்க தமது அதிகாரிகளை இந்திய இராணுவம் அனுப்பி வைக்கும் என்றும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் ஒரு குழுவினர் கருத்தரங்கில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கு குறித்து இலங்கை தூதரக வட்டாரங்களில் விசாரித்த போது, “இலங்கை: வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு நட்பு நாடுகளும், பிற உலக நாடுகளும் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் என்பதை முடிவு செய்ய இக்கருத்தரங்கு உதவியாக இருக்கும்.
தேசிய வளர்ச்சி, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்.
ஆனால், இந்தியாவின் பங்களிப்பைத்தான் இலங்கை மிகவும் உயரியதாகக் கருதுகிறது’ என்று தெரிவித்தன.
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வைகோ
தமிழினப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்பில் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்துள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் இடம்பெறவுள்ள இக்கருத்தங்கில் இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்வர் என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது.
இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது. அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்து, இலங்கை அரசுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், ஐ.நா. மனித உரிமைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், குழந்தைகள் வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கு ஆதரவாகும் இந்திய அரசு செயல்படும் என்று இந்திய அரசின் சார்பில் அவர்கள் தெரிவித்த கருத்து, தாய்த் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசு நடத்தும் இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழுவும் பங்கேற்பது தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும்.
சிங்கப்பூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப்பாளர் சேஷாத்திரி சாரி பேசும்பொழுது, “வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.
அப்படியானால் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டதை சர்வ சாதாரணமாக நினைக்கிறாரா? இதுபோன்ற மிகவும் ஆபத்தான நச்சுக் கருத்தை சேஷாத்திரி சாரி தெரிவித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
உலகம் தடை செய்து இருக்கின்ற இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், குண்டுகளை வீசியும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து மனிதப் பேரழிவை நடத்திய ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை இங்கிலாந்து சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.
ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் விசாரணைக்குழுவும் இதனை உறுதி செய்து இருக்கின்றது.
பன்னாட்டு நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்வது, இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு நீதியை குழிதோண்டிப் புதைக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுவில், இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.
ஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதித்துச் செயல்படும் வகையில், இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழம் குறித்து தமிழர் நாட்டில் இருந்து கோரிக்கை மேல் கோரிக்கை. எண்ண முடியா அளவு கோரிக்கைகள். இதுவரை ஏதாவது ஒன்றுக்காவது அந்த வடவர்கள் செவி சாய்த்து இருப்பார்களா..?! சாமிவேலு காலத்தில் மகாதிரிடம் ஒவ்வொரு MIC ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது கொடுக்கப்பட்ட மகஜருக்கான கதிதான். பழனி இந்த வகையில் நல்ல அறிவாளி. நடக்கமுடியாததற்கு எல்லாம் எதற்கு umnobவிடம் மகஜர் என்ற தீர்க்கசரிசனமான முடிவு. மந்தியாக இருக்கும் காலம் வரை இருப்பதை நன்கு அனுபவித்தால் அதுவே போதாதா..?! பிறகு பதவி விலகும் போது தூக்கமுடியாத அளவுக்கு கிரஜுடி. வாழ்நாள் முழுவதும் செலவுக்குமேல் போதுமான அளவு பென்ஷன்…! எதற்கு அதிகம் சும்மா வீணே கத்திக்கொண்டு…?! சமுதாயத்திற்காகவே தங்களை முற்றும் முழுவதும் அர்பணித்துக்கொண்ட இவர் போன்ற ‘நமது’ தலைவர்களுக்கு இதுகூடவா அரசு செய்யக்கூடாது..?! இந்தியவில் புகுந்து மலேசியாவுக்கு வந்து விட்டேன்; மன்னிக்கவும். எங்கும் நமது பரிதாப நிலையைக்கண்டால் சிந்தனை என்னவோ ஒரு நிலையில் இருக்க மறுக்கிறது. சாக்ரடிஸ் கூறியபடி மக்களை எப்படி சிந்திப்பவர்களாக ஆக்குவது? மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் (குறிப்பாக அரசியல்வாதிகள், பொய் சாமியார்கள்) அவர்களை ஏய்ப்பது சிரமம் ஆகிவிடும்.
இந்தக் “இராணுவ கருத்தரங்கிற்கு” இந்தியா இந்த பாஜக தலைவர் சுப்பரமணியன் தலைமையில் ஒரு அரசியல் குழுவை அனுப்பவது PM மோடி வேண்டும் என்றே தமிழர்கள் முகத்தில் கரியைப் பூசி, அவர்களின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி இன்பம் காண்பதாகும். BJP காலத்திலும் நம் ஈழ சகோதரர்களுக்கு விடிவு புலராது போல் இருக்கிறது. அவரது வெளிவிவகாரக் கொள்கை என்பது பாகிஸ்தான் காஸ்மீர் சம்பந்தமானது மட்டும்தான். பெரும்பாலான தமிழர் நாட்டு மக்கள் தமிழர் இன உணர்வற்று, தன இனத்திற்கு உண்டாகும் அல்லல்களைப் பற்றி, அவலங்களைப்பற்றி சிஞ்சிற்றும் கவலைக்கொள்ளாமல், தினமும் டாஸ்மாக்களிலும், சினீமா அரங்குகளிலும், சின்னத்திரையிலும் மூழ்கிக் கிடக்கும் வரை ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் தமிழர் நாட்டில் கிரிகெட் ஆட்டமே.
வடக்கத்தியான் அவன் புத்தியை காட்டிவிட்டான்.இந்தியாவில் ஆட்சியில் உள்ள எவனையும் நம்ப முடியாது.ஆட்சிக்கு வரு முன் BJP அரசியல் வாதிகள் பேசிய பேச்சென்ன? ஏறிய ஏணியை எத்தும் ஈன ஜென்மங்கள்.