இலங்கையில் காவல் துறையினரின் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்த ஆண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே காவல் நிலையங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என கிட்டத்தட்ட 98 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்சித்திட்ட இயக்குநர் பசில் பெர்ணான்டோ பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலானவர்கள் காவல்துறை காவலில் இருந்து தப்ப முயன்றபோது அல்லது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின் போது கொல்லப்பட்டதாக காவல்துறையினர் வழமையான பாணியில் கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் தொடர்ந்தும் இராணுவ மயமாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அங்கு மக்கள் மத்தியில் நிலவும் அச்ச சூழ்நிலை காரணமாக அங்குள்ள நிலைமை பற்றி தமக்கு உரிய தகவல்கள் கிடைப்பதில்லையென்றும் பசில் பெர்ணான்டோ கூறினார்.