ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை! மக்களை ஏமாற்றும் செயல்!- சிவாஜிலிங்கம்

sivajilingam-001காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவானது போலியான ஓர் வெளிக்காட்டலேயாகும். கடந்த காலங்களிலும் அரசாங்கம் பல்வேறு பெயர்களில் ஆணைக்குழுக்களை உருவாக்கியிருந்தது.

எனினும்,  இந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் வெறும் அறிக்கைகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது. ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தியதில்லை.

அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாகவே அரசாங்கம் வடக்கு மக்களை ஏமாற்றி வருகின்றது. மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு வழிகளை அரசாங்கம் தெரிவு செய்திருந்தது.

மக்களை ஏமாற்றும் நோக்கிலான ஆணைக்குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.

இதன் காரணமாகவே ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவையின் ஆணையாளா நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஆதரவளிக்க்த் தீர்மானித்தோம்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் போலி விசாரணைக்குழுவிற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளது.

சர்வதேச நிபுணர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது.

வடக்கு மக்கள் மீது அரசாங்கத்திற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டுமென சிவாஜிலிங்கம் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய  நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

TAGS: