சபரகமுவ பல்கலைக்கழகத்தில் உள்ள முதலாம் வருட மாணவர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சுவரொட்டிகள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஞாயிறு அதிகாலை தமிழ் மாணவன் ஒருவர் மீது முகமூடி அணிந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்ஸன் என்ற முதலாம் வருட மாணவனே தாக்கப்பட்டு பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு 12, ஒரு மணிவரையில் தாங்கள் மாணவர்கள் படித்துவிட்டு, தாங்கள் நித்திரை கொண்டதாகவும், பின்னர் இரண்டு மணியளவில் தான் எழுந்து இயற்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கழிப்பறைக்குச் சென்றபோது, முகமூடி அணிந்திருந்த ஒருவர் திடீரென்று தனது வாயைப் பொத்திக் கட்டிப்பிடிக்க மற்றுமொருவர் கட்டையொன்றினால் தலையில் அடித்ததாகவும், அதனையடுத்து தான் மயங்கிவிட்டதாகவும் தாக்கப்பட்ட மாணவன் கூறியுள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது, பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியில் காட்டுப்பாங்கான ஓரிடத்தில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டிருந்ததை உணர்ந்ததாகவும், பின்னர் ஒருவாறு எழுந்து விடுதி வாசலில் சென்று விழுந்ததையடுத்து சக மாணவர்கள் தன்னைக் கண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏனைய தமிழ் மாணவர்கள் தகவல் தெரிவிக்கையில், கடந்த மாதம் 20 ஆம் திகதி இந்தப் பல்கலைக்கழகத்தின் பண்டா மாணவர் விடுதியில் உள்ள கழிப்பறையில் கொச்சைத் தமிழில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அதில் அங்கு பயிலும் தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியர் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததாகக் கூறினர். இந்த அறிவித்தலை மீறி தமிழ்பேசும் மாணவர்கள் இங்கு கல்வி பயின்றால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த சுவரொட்டியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
முதலாம் வருடத்தில் கல்வி பயில்கின்ற பத்து மாணவர்களின் பெயர்களும் அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது தடவையாக அத்தகைய சுவரொட்டிகளை ஒட்ட வந்தவர்களே சுதர்ஸன் என்ற மாணவனைத் தாக்கியுள்ளதாக மாணவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்த எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை பல்கலைக்கழக நிர்வாகம் பார்வையிட்டுச் சென்றிருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரும், பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள் எவரும் வெளியில் செல்லாதவாறு பொலிசார் தடுத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டடு இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைதான் ஒற்றுமை உள்ள இலங்கை வேண்டும் என்று இந்த துரோக இந்தியா அடிக்கடி சொல்லி வருகிறதா?