இன வன்முறையை தூண்டி மோதலை உருவாக்கச் சதி – சரவணபவன்

timthumb (1)சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டமை, அங்கு கல்விகற்கும் தமிழ் மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை என்பன மீண்டும் இன வன்முறையைத் தூண்டி மோதல் போக்கை உருவாக்குவதற்கான சதி நடவடிக்கையே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இது குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பித்து இதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,  சப்ரகமுவ பல்கலைக்கழ கத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர் ஒருவர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அங்கு பயிலும் தமிழ் மாணவர்களை பல்கலைக் கழகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்டு வரும் அடக்குமுறையின் மற்றொரு வெளிப்பாடே. தமிழ் மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளை முடக்கு வதற்கு திட்டமிட்ட ரீதியில் மேற் கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு தமிழ் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை மேற் கொள்வதன் மூலம் இனவன் முறையைத் தூண்டி மீண்டும் ஒரு இன கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான சதி முயற்சியே இந்தத் தாக்குதல் சம்பவம். அதிகாரத் தரப்பொன்றின் ஆசீர்வாதத்துடனேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களை பல்வேறு வழிகளில் அடக்கி ஒடுக்கி அவர்களின் இருப்பை நிர்மூலமாக் குவதற்கு பல்வேறு வடிவங்களில் இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் தமிழர்களை பயங்கரவாதிகளாக வெளியுலகுக்குக் காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அப்பாவித் தமிழ் மாணவர்களுக்கு புலி முத்திரை குத்தி அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக இவ்வாறான சம்பவங்களை சில சூத்திரதாரிகள் தூண்டி விடுகிறார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பு உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசு நேர்மையுடன் செயற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

TAGS: