சிறீலங்காவில் சட்ட ஒழுங்கை அமுல்படுத்துமாறும் அமெரிக்கா வலியுறுத்தல்

usa_indian flagவடக்கில் இருந்து காணாமல் போன உறவுகளின் உறவினர்களுடனான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள குடும்பத்தினரினது பாதுகாப்பை, கொழும்பிலும் மீண்டும் வீடு திரும்பியதன் பின்னரும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது பிக்குகள் உட்பட சிலர் அத்துமீறி நுழைந்து இடையூறு விளைவித்தமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன,

அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளடங்கியதாக நேற்று (04) நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது பிக்குகள் உள்ளடங்கிய, கோபம் கொண்ட கும்பல் ஒன்றினால் தடங்கல் விளைவிக்கப்பட்டது. சிவில் சமூக குழுக்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் சிவில் மோதலினால் பாதிக்கப்பட்ட, காணாமல் போன நபர்களின் குடும்பத்தினர் கொழும்பு கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் தமது கதைகளை பகிர்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் போதே இந்த கும்பல் திடீரென அத்துமீறி பிரவேசித்தது.

இந்த நிகழ்வை நிறுத்துவதற்காக அத்துமீறிய இந்த குழுவின் தடங்கல் விளைவிக்கும் செயற்பாடு தொடர்பில் உள்ளூர் பொலிஸாரின் ஆரம்ப முயற்சியானது, கும்பலின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமையப் பெற்றமை குறித்து அமெரிக்க தூதரகம் கரிசனையை வெளியிடுகின்றது.

இருப்பினும், இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நிலைமையை தணிப்பதற்கு பொலிஸார் வினைத்திறனுடன் செயற்பட்டனர். வெறுப்பு மிக்க சுலோகங்களை கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்ததுடன், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

இந்த கும்பல் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான தமது உரிமையை பயன்படுத்துபவர்களாக நடந்து கொள்ளவில்லை. சிறுவர்கள் உள்ளடங்கலாக மோதலில் இருந்து தப்பியவர்களின் அமைதியான ஒன்றுகூடலுக்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்து கொண்டனர். இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தும் மற்றும் அமைதிப்படுத்தும் நோக்குடன் இந்த குழு நடந்து கொண்டது என்பதே உறுதியான தோற்றப்பாடாக இருந்தது.

சட்ட ஒழுங்கை அமுல்படுத்துமாறும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளடங்கலாக அனைத்து பிரஜைகளும் தமது அடிப்படை மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு அனுமதிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்திக் கேட்கின்றோம்.

வடக்கில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள குடும்பத்தினரினது பாதுகாப்பை, கொழும்பிலும் மீண்டும் வீடு திரும்பியதன் பின்னரும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் நாம் கேட்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: