தமிழர்களின் தலைவிதியை மாற்றியமைக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: பா.அரியநேத்திரன்

Ariyam-100வெறுமனே அபிவிருத்திக்காகவும், சலுகைகளுக்காகவும் வாக்களிப்பவர்களாக இருப்பார்களேயானால் எங்களது உரிமையை வென்றெடுக்க முடியாது. தமிழர்களது எதிர்காலத்தினை சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கக் கூடிய த.தே.கூட்டமைப்பை பலப்படுத்தினால் மாத்திரமே இழந்த இழப்புக்களுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

தாந்தாமலை மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டவேளையிலேயே இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வீகிதாசாரம் 41 வீதமாகவே இருக்கின்றது. அந்த தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே சிந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் கிழக்கு மாகாணசபை த.தே.கூட்டமைப்பினர் வசம் வந்திருக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் மாகாணசபைதான் தமிழ் மக்களுக்கான இறுதித்தீர்வு இல்லை என்பதனை கடந்த 65 வருடகாலமாகவே தமிழ் மக்களுக்காக வேண்டி தலைமைதாங்கிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.

ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் மாகாணசபை முறைதான் தமிழ் மக்களுக்கான இறுத் தீர்வு என்று, அவ்வாறு இல்லை என்பதனை முதலில் அவர்கள் புரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டதற்குக் காரணம் வட,கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை உறுதிப்படுத்தி, சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் பலம் என்ன என்பதனை பற்றுறுதி கொண்ட தமிழ்மக்கள் நிருபித்து காட்டியிருக்கின்றார்கள்.

அந்த பலத்தின் ஊடாகத்தான் இன்று வடகிழக்கு தமிழ்மக்களின் அபிலாசைகளும், அவலங்களும், மனித உரிமை மீறல்களும், வடகிழக்கிலே நடைபெறுகின்ற காணி அபகரிப்புக்களும், இராணுவ மயமாக்கங்களும் இன்று சர்வதேசத்தில் கூர்மைபெற்றுள்ளது. அதன் நிமிர்த்தமாகத்தான் சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

வடகிழக்கு தமிழ்மக்களாகிய நாம் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து அமைச்சர் பதவிகளையும், முதலமைச்சர் பதவிகளையும் பெற்றிருப்பார்களேயானால் இன்று வடகிழக்கிலே எஞ்சியிருக்கும் தமிழர் தாயக நிலங்களும் வரைபடத்திலிருந்து இல்லாமல் போயிருக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் நினைக்கின்றார்கள் அரசியல் என்பது பாலம் கட்டுவதும், குளங்கள் திருத்துவதும், விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்வதும், பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதும், வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் நிதியை வைத்துக்கொண்டு தாங்கள் இவற்றையெல்லாம் செய்வதாக தம்பட்டம் அடிப்பதுந்தான் அரசியல் என்று நினைக்கின்றார்கள்.

அபிவிருத்தி அரசியல் என்பது யாரும் செய்யக்கூடியதொன்று அபிலாஷைகளுக்கான அரசியல் என்பது அரசிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருப்பவர்களால் செய்யமுடியாது. இன்று இலங்கை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் சவாலாக இருக்கும் எதிர்க்கட்சி என்றால் அது வேறெந்தக்கட்சியும் இல்லை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரந்தான்.

இதனை தமிழ்மக்கள் சார்ந்த புத்திஜீவிகள் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும்.

வெறுமனே கலை, கலாசார பண்பாடுகளை காப்பாற்றவேண்டும் என்று மேடைகளில் முழங்கினால் மாத்திரம் போதாது. அந்த கலை பண்பாடுகளை பிரதிபலிக்கும் இனத்தின் நிலத்தை தக்க வைக்கக்கூடிய அரசியல் பலமாக இருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பை பலப்படுத்த தமிழர்களாகிய புத்திஜீவிகள் த.தே.கூட்டமைப்பிற்கு வழிகாட்டிகளாக மாறவேண்டும் இதுதான் இன்றைய அரசியல் தேவை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

TAGS: