போர்க்குற்ற சாட்சியங்களை கூட்டமைப்பின் ஊடாக வழங்கலாம்: எம்.ஏ.சுமந்திரன்

Sumanthiranஇலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க விரும்பும் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தொடர்பாக அண்மையில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் யாழ், ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சமகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குறித்த சர்வதேச விசாரணை குற்றவியலுடன் சம்மந்தப்பட்டதென்ற வகையில், உள்நாட்டிலிருந்து விசாரணைகளுக்கு சாட்சியம் வழங்குவது பாதுகாப்பானதல்ல. அதனை ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளரும் அறிந்திருக்கின்றார்.

அதனாலேயே பெரும்பாலான சாட்சிகளை, புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் பெறுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. ஆனாலும் உள்நாட்டிலிருந்தும் மிக பாதுகாப்பான முறையில் சாட்சியங்களை வழங்குவதற்கு அவர்கள் பொறிமுறைகளை உருவாக்கியிருக்கின்றார்கள்.

அதற்கு மிக முக்கியமான சாட்சிகளை வைத்திருக்கும் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருடனாவது, தொடர்பு கொள்வதன் மூலம் பாதுகாப்பான சாட்சியத்தை வழங்க முடியும்.

மேலும் நாங்கள் குறிப்பிடுகின்றோம். மிக முக்கியமான அல்லது பெறுமதியான சாட்சியங்களை வைத்திருக்கும் மக்கள் என. அதன் அர்த்தம் ஒரு குற்றத்திற்கு அதிகளவான சாட்சியங்களை வழங்குவதன் மூலம் அந்த குற்றத்தை நிரூபித்துவிட முடியாது. ஒரு சாட்சி வழங்கினாலும் அது பெறுமதியானதாக இருக்க வேண்டும்.

எனவே பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள், போர்க்குற்றங்கள், காணாமல்போதல்கள், மோசமான இடப் பெயர்வுகள், படுகொலைகள், போர் நடந்த பகுதிகளில் மக்கள் மீதான தாக்குதல்கள் போன்ற மிக முக்கியமான விடங்களில் பெறுமதியான சாட்சியங்களை வழங்குவதற்கு மக்கள் முன் வரவேண்டும்.

இதேபோன்று உலகில் வேறு நாடுகளில் இடம்பெற்ற விசாரணைகளை விடவும், இந்த விசாரணைகள் மிக பெறுமதியானதாக இருக்கும். மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இந்த விசாரணைகளுக்கு சாட்சியத்தை வழங்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றது.

உதாரணமாக போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் நாடாளுமன்றில் ஒவ்வொரு நாளும் உரையாற்றியுள்ளார்.

அந்த உரைகளில் முக்கியமாக போர் இடம்பெறும் பகுதிகளில் நடந்துகொண்டிருந்த மக்கள் உயிரிழப்புக்கள் மற்றும் இடப்பெயர்வுகள் போன்ற அவல நிலையினை பதிவு செய்துள்ளார். அவை மிக முக்கியமான சாட்சிகளாகும்.

அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்றவகையிலும், அவர் அந்த உரையை நிகழ்த்தியபோது சபையில் இருந்த ஆளும் தரப்பினர், எதிர்ப்பு தெரிவிக்காமையினாலும் அவருடைய சாட்சிகள் மிக பெறுமதியானவையாகும்.

எனவே அந்த ஆவணத் தை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து பெற்றுக் கொண்டு அனுப்பிவைக்கவுள்ளோம். இதேபோன்று பல முக்கிய வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: