பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! விளைவுகள் பாரதூரமாக இருக்கும்!- தமிழ் கூட்டமைப்புக்கு ராஜபக்ச எச்சரிக்கை

mahinda-sampanthanஎமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை  அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய ஜனாதிபதி ஊடகமொன்று எழுப்பிய பிரத்தியேகமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டுமொரு பேச்சுவார்த்தையை நடத்தத் தயாராக உள்ளதா? என்ற கேள்விக்கே ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஒரு அழைப்பையும் விடுத்திருந்தார்.

ஆனால் அவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் அம்மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பவும் முயற்சித்து வருகின்றனர்.

இது ஆரோக்கியமானதல்ல. எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழில் விட்டுவரும் அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகள் மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பாகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை அல்ல.

நாம் இந்தத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பல சந்தர்ப்பங்களை வழங்கினோம். அவை எதனையுமே அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

அரசாங்கம் ஏதோ தமக்குத் துரோகம் இழைப்பது போலவும், தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கமே பின்னடிப்புச் செய்து வருவதாகவுமே பிரசாரம் செய்கின்றனர். இதனைத் தமிழ்க் கூட்டமைப்பு மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழில் அறிக்கை விட்டால் எனக்கோ அல்லது அரசாங்கத்திற்கு எதுவுமே தெரியாது என அவர்கள் நினைத்து வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அறிக்கைகளும் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது.
என்றும் ஜனாதிபதி கூறினார்.

அத்துடன் எமது தாய்நாட்டின் நலன் கருதி தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயல்பட முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற சில கட்சிகள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ் ஊடகங்களின் காத்திரமான பங்களிப்பு மிக அவசியம். தமிழ் ஊடகங்கள் நினைத்தால் தமிழ்க் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவர முடியும்.

அவ்வாறு செய்தால் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்தவர்களாக இருப்பீர்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒவ்வொரு அறிக்கைகளும் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது. என்றும் ஜனாதிபதி கூறினார்.

TAGS: