பற்றைக் காட்டிற்குள் ஆதிவாசிகளைப் போன்று வாழும் வசாவிளான் மக்கள்

vali_vasavilan_people_001வலி.வடக்கு வசாவிளான் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 35 குடும்பங்கள் அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல் தலைமைகளினாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 25 வருடமாக கைதடி – நுணாவில் பகுதியில் உள்ள பற்றைக் காட்டிற்குள் ஆதிவாசிகளின் வாழ்கைக்கு ஒப்பான வாழ்க்கையினை வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொழில் வாய்ப்பு, சுகாதரம், கல்வி, மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் போன்ற சாதாரணமாக மனிதன் வாழ்வதற்கு தேவையான வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் அவலம் நிறைந்த வாழ்க்கையினை வாழும் மக்கள் தமது சொந்த நிலத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே தமது ஆசை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கு வசாவிளான் து/245 கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த சுமார் 35 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கைதடி– நுணாவில் பகுதியில் உள்ள ரயர் பற்றிக் காணிக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அன்றில் இருந்து இன்றுவரைக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினால் அமைத்துக் கொண்டுக்கப்பட்ட அரைநிரந்தர வீடு, ஒரு கிணறு மற்றும் 5 மலசல கூடத்தினைத் தவிர அவர்களுக்கு எந்தவிதமான உதவிகளும் அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல் தலைமைகளினாலும் வழங்கப்படவே இல்லை.

அனைத்து தரப்பினராலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தொழில் வாய்ப்பு, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற எந்தவிரமான வசதி வாய்ப்புக்களும் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இங்குள்ள மாணவர்கள் ஆரம்பக் கல்வியினை தொடர்வதற்குக் கூட அந்த குடும்பங்களில் வசதி வாய்ப்புக்கள் இல்லை. பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களிலும் அந்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். தொடர்ந்து எரிபொருள் செலவிட்டு விளக்கேற்றி கல்வி பயில்வதற்கான வசதிகளும் அவர்களிடம் இல்லை.

நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் நாளாந்தம் கிடைக்கும் கூலி வேலையினைல் வரும் வருமானத்திலேயே அங்குள்ள மக்களுடை உணவுத் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படுகின்றது.

அடர்ந்த பற்றைக் காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இவர்களது குடிசைகளினை இரவு நேரங்களில் விச ஜந்துக்களின் நடமாட்டங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. விசஜந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை வைத்திய சாலைக்குச் சேர்ப்பதற்கு பல கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. குடிதண்ணீர் பெற்றுக் கொள்ளவதற்காகவும் அருகில் உள்ள பிரதான வீதியான ஏ-9 வீதியினைக் கடந்து செல்ல வேண்டும்.

மழை காலங்களில் இக் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வயல் நிலங்களோடு இணைந்து வெள்ள நீர் குடிமனைகளுக்குள் புகும் சந்தர்ப்பங்களும் உள்ளது.

மேலும் அங்கிருந்த 3 குடும்பங்களின் வீடு அமைந்திருந்த காணியின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து அவர்களை வெளியேற்றியுள்ளனர். அந்தக் காணிகளுக்குள் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட அரைநிரந்தர வீட்டினை மீள வேறு இடத்தில் அமைப்பதற்குக் கூட வசதிகள் அற்ற நிலையில் அந்தக் குடும்பங்கள் வேறு குடும்பங்களில் வீடுகளில் தங்கியுள்ளார்கள். அரசாங்கத்தினால் எப்போதாவது வழங்கப்படும் உலர் உணவுகளும் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

அம்மக்களுடைய அவல நிலை தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலகம், ஆளும் கட்சி அமைச்சர், சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி நகர சபை மற்றும் பொது அமைப்புக்கள் பல வற்றிற்கு அறிவித்தல் கொடுத்தும் இதுவரை காலமும் எந்தவிமான உதவிகளும் வழங்கப்படவில்லை.

எமது சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தோம் இன்றுவரை எங்களுடை சொந்த நிலங்களை அவர்கள் காட்டக் கூட இல்லை. ஆனால் எங்களை வேறு எங்காவது கொண்டு சென்று அங்கு நிரந்தரமாக குடியேற்ற முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக இங்கிருக்கும் குடும்பங்கள் அனைத்தினையும் நாவற்குழியில் கொண்டு சென்று குடியேற்றுவதாக தெரிவித்திருந்தனர். ஆனாலும் தாம் எமது சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என்பதையே உறுதிபட அவர்களிடம் தெரிவித்துவிட்டோம்.

கடந்த 25 வருடங்களில் பல தடவைகள் தொண்டு நிறுவனங்களில் இருந்து வருகைதந்தவர்கள் பதிவுகளை மேற்கொண்டு எமது குடிமனைகளை பார்வையிட்டுச் சென்றிருந்தனர்.

அவர்களைப் போல் வந்த அரசாங்க அதிகாரிகள் வாசலில் நின்று கொண்டே விபரங்களை திரட்டிச் சென்றார்கள். ஆனால் அரசியல் வாதிகள் யாருமே இங்கு வந்ததே இல்லை. இங்கு ஒரு இடத்தில் 35 குடும்பங்கள் வசிக்கின்றனர் என்று அவர்களுக்கு தெரிந்தே இருக்காது.

TAGS: