ஐ.நா போர்க்குற்ற விசாரணை, சகல இலங்கையர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்!: நவநீதம்பிள்ளை

Navanethem_Pillayஇலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க்குற்றங்கள் குறித்து ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்குழு தகவல்களை சேகரிக்க இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு வெளியில் தகவல்களை பெறக் கூடிய சிறந்த வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்குழுவினர் நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படாவிட்டாலும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவது சரியான தரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

வடகொரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த இரு நாடுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை சம்பந்தமான விசாரணைக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக நான் காணவில்லை.

இந்தியா மற்றும் தாய்லாந்து வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாக செய்திகளில் உண்மையில்லை.

இலங்கையிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ வீசா கோரி எவரும் விண்ணப்பிக்கவில்லை.

விசாரணைக்குழுவினர் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் தொடர்பாக சில இலங்கை ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்ட தவறான தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

12 பேர் கொண்ட விசாரணைக்குழு ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும். தேவை ஏற்பட்டால் வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும்.

விசாரணைக்குழுவினர் சாட்சியங்கள், தகவல்களை சேகரித்து வருவதுடன் அட்டூழிய குற்றச்சாட்டுக்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணைகளில் அவர்கள் கண்டறியும் விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள்.

குற்றச் செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

TAGS: