செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்

Satelite-phonesசெய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அண்மையில் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அண்மையில் கொழும்பு, மருதானைக்கு அழைக்கப்பட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் ஓர் கருத்தரங்கு நடத்தப்பட்டிருந்தது.

இந்த கருத்தரங்கின் போது போர் காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த கருத்தரங்கின் போது மாவீரர் குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் ஜெனீவாவிற்கு நேரடியாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதி நவீன செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறு ஜெனீவாவிற்கு மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் சாட்சியங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் கருத்தரங்களில் பங்கேற்ற வெளிநாட்டு உளவுப் பிரிவொன்று, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக தகவல்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உள்ளிட்ட பல வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சாட்சியங்கள் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பௌத்த பிக்குகளும் சென்ற போது, சாட்சியங்களை திரட்ட பொருத்தப்பட்டிருந்த செய்மதித் தொழில்நுட்ப கருவிகளை அகற்றுமாறு அமெரிக்கத் தூதரக உயரதிகாரியொருவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமெரிக்கத் தூதரக அதிகாரியின் நடவடிக்கைகள் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட சில மேற்கத்தைய தூதரகங்கள் இந்த கருத்தரங்கினை நடாத்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

TAGS: