இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு – இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்

mahinda_rajapaksaகைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும்.

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக இந்தியா தொடர்ந்தும் உதவும்: இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவ தயாராகவே உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்திய அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தியமைக்காக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை அரசாங்கத்துக்கு இன்று நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு எப்போதும் நட்பு ரீதியாக உதவ இந்தியா தயராகவே உள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. இது சமூக, பொருளாதார, கலாசார, கல்வி, சமயம் என்ற அடிப்படையில் பிணைந்துள்ளது என்று சிங்ஹா குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகரத்தினால் “இந்திய இலங்கை பங்குடைமை விரிவாக்க காலம்” என்ற தலைப்பிலான பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த பிரசுரத்தை அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய சிங்ஹா, இலங்கையுடன் அபிவிருத்தி பங்குடைமையானது ஒற்றுமை மற்றும் அரசியல் தெளிவுத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

TAGS: