இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிய செயற்பாடு என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு குழு வொன்றை நியமிப்பதாயின் அந்தக் குழுவானது நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கிலானதாக அமைய வேண்டுமே தவிர நாட்டைத் தண்டிக்கும் நோக்கிலானதாக அமையக் கூடாது என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனாலேயே சர்வதேச விசாரணைகளுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். அது மட்டுமன்றி இலங்கையில் எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை.
அவ்வாறானதொரு நிலையில் இலங்கை தொடர்பில் உயர்மட்டத்தில் கவனம் செலுத்தப்படுவதானது அதிர்ச்சிதரும் வகையில் அமைந்துள்ளது.
பிரிவினைவாத எல்.ரி.ரி.ஈயினர் அழிக்கப்பட்டமைக்காக நாட்டைத் தண்டிக்கும் நோக்கில் செயற்பட்டுவரும் வெளிநாடுகளில் வாழும் எல்.ரி.ரி.ஈ ஆதரவுக் குழுவினரின் முயற்சியாகவே இந்த விசாரணைக் குழு அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தனது செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம், வர்த்தக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தமிழர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமெரிக்கத் தூதுவர் பிரசாத் காரியவசம்,
இது தவறானதொரு கருத்து. கொழும்பு நகரிலுள்ள 70 வீதமான வர்த்தக நிலையங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. தமிழ் அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். வடமாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் உள்ளார். தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகவே உள்ளது என்றார்.
எனினும், தமிழ் பிரிவினைவாத குழுவினர் இலங்கைக்கு எதிராக நீண்ட காலமாகவே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.