வறட்சியின் பிடியில் வட இலங்கை : 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு

north_lankaவட இலங்கையில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது

இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் மட்டும் வறட்சியின் காரணமாக இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் ஐந்து லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக குருணாகலை மாவட்டமே வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சீரற்ற காலநிலை காரணமாகவே நாடெங்கும் வறட்சி ஏற்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறையின் ஊடக உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பிபிசியிடம் கூறினார்.

மொனராகலை, புத்தளம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களும் இதனால் பாதிப்படைந்துள்ளன.

கருகிய மரங்கள்

தென்னை, வாழை மரங்கள் காய்ந்து கருகுகின்றன

வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயச் செய்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

உடனடி நிவாரணமாக அரசாங்கம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் குடிநீர் விநியோகத்தை முதன்மைப்படுத்தி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இம்முறை வறட்சி நிலவுவதனால், தென்னை மற்றும் வாழை மரங்கள் பெருமளவில் அழிந்துள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறுகிறார்.

ஆயினும், வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இழப்பீடும், நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர். -BBC

கிணறுக்குள் கிணறு தோண்டும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 172 குடும்பங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 319 பேர் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக  அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குடிநீரை பெற முடியாது தவிக்கும் மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம், பிரதேச சபைகள், பாதுகாப்பு தரப்பினர், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு நீர்தேக்கத்தில் நீர் வற்றியுள்ளதன் காரணமாக தண்ணீர் பிரச்சினை உக்கிரமடைந்திருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அங்குள்ள மக்கள் தமது கிணறுகளை மேலும் ஆழமாக தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS: