நவி.பிள்ளை கூடாது! ஹுசைன் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வார்: இலங்கை நம்பிக்கை

zeid_navi_001இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணையின்போது மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது செல்வாக்கை செலுத்தி வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு செல்லாமலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு நம்பகமான விசாரணையை மேற்கொள்ளும் என்று நவநீதம்பிள்ளை கூறியிருப்பதை கொண்டே இலங்கையின் வெளியுறவு அமைச்சு தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை குறித்து பேசப்பட்ட நாளில் இருந்து அது பக்கசார்பாகவே இருக்கும் என்பதை நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டின.

இந்தநிலையில் இந்த மாத இறுதியுடன் தமது பதவியை விட்டு விலகவுள்ள நவநீதம்பிள்ளை மீண்டும் மீண்டும் ஐக்கிய நாடுகளின் விசாரணையை தமது செல்வாக்குக்குள் வைத்துள்ளார்.

இலங்கைக்கு வெளியில் இருந்து பெறக்கூடிய சாட்சியங்களே நம்பகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளமையை இதற்கு உதாரணமாக கூறலாம்.

எனினும் நவநீதம்பிள்ளையின் வெளியேறுகையை அடுத்து அந்த பதவியை ஏற்கவுள்ள இளவரசர் செய்ட் அல் ஹுசைன், இந்த விடயத்தில் மாறுதல்களை ஏற்படுத்துவார் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அவர் இலங்கை விடயம் தொடர்பில் பக்கசார்பின்மை, சமமாக மதித்தல், இறைமை, உள்ளக விசாரணைகளுக்கான அங்கீகாரம் மற்றும் நீதி என்பவற்றை கருத்திற்கொண்டு செயற்படுவார் என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.

நவிபிள்ளையின் கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்து குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு,

நவநீதம்பிள்ளை அண்மையில் வெளியிட்ட கருத்து தனிப்பட்ட ரீதியில் பக்கசார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றென தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைக்காக இலங்கைக்கு செல்ல வேண்டிய அத்தியவசியமில்லை என நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக அண்மைய காலமாக ஏற்பட்ட பிரச்சினைகளில் செயற்பட்ட வீதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் இடம்பெற்று வரும் சமூக, பொருளதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து கவனத்தில் கொள்ளாது, இலங்கை பற்றி சர்வதேச தளத்தில் தவறான தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் நவநீதம்பிள்ளை தொடர்ந்தும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: